
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் எடுக்க, இலங்கை 109 ரன்களுக்கெல்லாம் சுருண்டது. இதனால் 143 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 303 ரன்களுக்கு டிக்ளர் செய்தது.
அதன்பின் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய போது, ஆறாவது ஓவரில் முகமது ஷமியின் பந்து வீச்சில் குசல் மெண்டிஸ் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது ஸ்லிப் பகுதியில் கோலி நின்று கொண்டிருந்தார். அதை பார்த்த மூன்று ரசிகர்கள், தங்களது நட்சத்திர வீரரை அருகில் பார்க்கும் வாய்ப்பை உணர்ந்து, பாதுகாப்பு வேலியை உடைத்து மைதானத்திற்குள் நுழைந்தனர்.
மைதானத்திற்குள் ஓடிய அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் சிரமப்பட்டு பிடித்து இழுத்துச்சென்றனர். அதைப் பார்த்துவிட்டு அங்கு சென்ற விராட் கோலி, அவர்களை எதுவும் செய்யாதீர்கள், விடுங்கள் எனக்கூறி,பின்னர் ரசிகர்களிடம் என்ன வேண்டும் எனக்கேட்டுள்ளார். அதற்கு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் எனக்கூற, உடனடியாக செல்ஃபிக்கு போஸ் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார் விராட் கோலி.
மேலும் களத்திற்குள் விராட் கோலியுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுக்கும் அந்த வீடியோவும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த செய்தியை பார்த்த பலரும் விராட் கோலி மிகவும் கோபக்காரர், ரசிகர்களை மதிக்க மாட்டார் என பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதெல்லாம் இல்லை இது தான் அவருடைய உணமையான குணம் என்று அவரின் செயல் மூலம் நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து போட்டியின் இடைவேளையின்போது தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.