மேட்சும் போச்சு.. வாட்ச்சும் போச்சு - சிஎஸ்கே vs மும்பை மேட்சில் நடந்த சம்பவம்!

மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் கசன்பர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
மேட்சும் போச்சு.. வாட்ச்சும் போச்சு - சிஎஸ்கே vs மும்பை மேட்சில் நடந்த சம்பவம்!
Published on
Updated on
2 min read

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே சனிக்கிழமை நடந்த விறுவிறுப்பான ஐபிஎல் மோதலில், மும்பை அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மாவுக்கு ஒரு எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. ஜேமி ஓவர்டன் வீசிய பந்தை திலக் வர்மா ஸ்கூப் ஷார்ட் ஆட முயன்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் பந்து அவர் நினைத்த திசையில் செல்லாமல், நேராக அவரது கை மணிக்கட்டில் பலமாகத் தாக்கியது. பந்து பட்ட வேகத்தில் அவர் கையில் அணிந்திருந்த விலை உயர்ந்த வாட்ச் கழன்று தரையில் விழுந்தது. வலியால் துடித்த திலக் வர்மா, உடனடியாக மும்பை அணியின் மருத்துவக் குழுவினரை உதவிக்கு அழைத்தார். முதலுதவிக்குப் பிறகு அவர் கையில் இருந்த வாட்ச்சும் எந்தச் சேதமும் இன்றி தப்பியதால் அவர் மீண்டும் அதை அணிந்துகொண்டார்.

மீண்டும் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகளைப் பார்த்தபோது, அது வெறும் சாதாரண வாட்ச் அல்ல, அது 'வூப்' (WHOOP) எனப்படும் உடல் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் ஒரு நவீன கருவி என்பது தெரியவந்தது. இதன் இந்திய மதிப்பு சுமார் 28,000 ரூபாய் ஆகும். எனினும், பந்து பட்டு பலமாகத் தரையில் விழுந்தும் அந்த வாட்ச் உடையவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்னிங்ஸில் 12-வது ஓவரின் கடைசி பந்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. இருப்பினும், இந்த விபத்திற்குப் பிறகு திலக் வர்மாவால் நீண்ட நேரம் களத்தில் நிற்க முடியவில்லை. அடுத்த இரண்டு பந்துகளிலேயே வெறும் 5 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனைத்து துறைகளிலும் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியை அன்ஷுல் கம்போஜ் மற்றும் நூர் அகமது ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் 159 ரன்களுக்குள் சென்னை கட்டுப்படுத்தியது. மும்பை அணி தரப்பில் நமன் தீர் 57 ரன்களும், ரயான் ரிகெல்டன் 37 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி பந்துவீச்சில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணிக்கு, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இளம் வீரர் கார்த்திக் சர்மா ஜோடி சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது. ருதுராஜ் 48 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்குத் துணையாக விளையாடிய கார்த்திக் சர்மா, தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவு செய்து 54 ரன்கள் குவித்து அசத்தினார். 11 பந்துகள் மீதமுள்ள நிலையிலேயே சென்னை அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் கசன்பர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஒட்டுமொத்தமாகச் சொன்னால், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து வெற்றி வாகை சூடியது. திலக் வர்மாவின் வாட்ச் கழன்று விழுந்த அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com