அரக்கோணத்தில் நடந்தேறிய அவலம்: வீடியோ கேம் விளையாடியதால் இளைஞருக்கு மனநலம் பாதிப்பு ..!

அரக்கோணத்தில்  நடந்தேறிய அவலம்: வீடியோ கேம் விளையாடியதால்  இளைஞருக்கு மனநலம் பாதிப்பு ..!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வீட்டில் தனியாக வீடியோ கேம் விளையாடிய கல்லூரி மாணவர் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம்  அரக்கோணம் அடுத்த காலிவாரி கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் தீபன் ( வயது 18 ).  இவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில்  முதலாம் ஆண்டு பிஇ., படித்து வருவதாக கூறப்படுகிறது.

வீட்டில் தனியாக உள்ள போது இரவு பகல் பார்க்காமல் அதிகளவில் வீடியோ கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இவரது தந்தை இறந்த நிலையில் அண்ணன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.

தாய் மற்றும் இவர் வீட்டில் உள்ள நிலையில் இவர் வீட்டில் தனியாக வீடியோ கேம் விளையாடியதாக  கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வரை நன்றாக இருந்த தீபன் திடீரென்று இன்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போன்று நடந்து கொண்ட சம்பவம் வீட்டில் இருந்த அனைவரிடமும் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரை அவரது தாய் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். மேலும் அவருக்கு அங்கே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

வீட்டில் தனியாக வீடியோ கேம் விளையாடிய மாணவன் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com