சுனில் கவாஸ்கர் காலில் விழுந்த சூர்யவன்ஷி.. "காதில் ரகசியமாக சொன்ன 3 வார்த்தை!" ஐபிஎல் எலிமினேட்டரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

கிரிக்கெட் உலகின் மாபெரும் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து வைபவ் சூர்யவன்ஷி ஆசி பெற்றார்.
Sunil Gavaskar praise
Sunil Gavaskar praiseSunil Gavaskar praise
Published on
Updated on
2 min read

நடப்பு ஐபிஎல் 2026 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் விசித்திர வீரன் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளார். இந்த நிலையில், போட்டி தொடங்குவதற்குச் சற்று முன்பாக, மைதானத்தில் நின்றிருந்த கிரிக்கெட் உலகின் மாபெரும் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் காலில் விழுந்து வைபவ் சூர்யவன்ஷி ஆசி பெற்றார். இந்தியப் பண்பாட்டின்படி பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவதை இந்த சிறுவன் தனது வழக்கமாகக் கொண்டுள்ளான். போட்டி தொடங்கும் அவசரம் காரணமாக கவாஸ்கரால் அவரிடம் நீண்ட நேரம் பேச முடியாவிட்டாலும், அந்த இளம் வீரருக்கு ஒரு முக்கியமான மெசேஜை அவர் கடத்தியுள்ளார்.

இது குறித்து இந்தியா டுடே ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், முல்லன்பூர் மைதானத்தில் போட்டிக்கு முந்தைய நிகழ்ச்சியின் போது வைபவ் சூர்யவன்ஷி தனது காலில் விழுந்த கணத்தில், அவரிடம் தான் என்ன சொன்னேன் என்பதை சுனில் கவாஸ்கர் வெளிப்படுத்தியுள்ளார். நேற்றைய போட்டியின் போது அவர் எனது காலில் விழுந்து ஆசி பெற்ற போது, நான் அவரிடம் 'லகே ரஹோ பேட்டே, லகே ரஹோ' (அப்படியே தொடர்ந்து அசத்து மகனே) என்று ஹிந்தியில் கூறினேன் என்றும், ஒருவேளை நான் அவருடன் மறுமுனையில் பேட்டிங் செய்து கொண்டிருந்தாலும் இதையே தான் அவரிடம் சொல்லியிருப்பேன் என்றும் கவாஸ்கர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர், தற்பொழுது கோடிக்கணக்கான இந்தியர்களைப் போல வைபவ் சூர்யவன்ஷியின் தீவிர ரசிகராக மாறியுள்ளார். இவ்வளவு சிறிய வயதிலேயே அவரை இந்திய அணியில் அவசரமாகச் சேர்க்க வேண்டுமா என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், கவாஸ்கர் அந்த சிறுவனுக்கு மிக விரைவிலேயே இந்திய அணியின் தொப்பியை வழங்க வேண்டும் என்று பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளார். ஸ்போர்ட்ஸ் தக் யூடியூப் சேனலில் பேசிய கவாஸ்கர், இந்த 2026-ஆம் ஆண்டானது கிரிக்கெட் வரலாற்றில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆண்டாகவே நினைவு கூறப்படும் என்றும், அவர் தற்பொழுது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முழுமையாகத் தகுதி பெற்று தயாராக உள்ளார் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த வெளிநாட்டு டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் நிச்சயம் தேர்வு செய்யப்படுவார் என்று தான் நம்புவதாகவும், இப்படி ஒரு அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்றால், வேறு எப்போது தான் வாய்ப்பு தருவார்கள்? என்றும் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். வெறும் 15 வயதே ஆன இந்த சிறுவன், சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களின் பந்துகளை எல்லாம் எவ்வித பயமும் இன்றி துவம்சம் செய்து வருவதால், அவருடைய தேர்வில் வயதை ஒரு தடையாகப் பார்க்கக் கூடாது என்றும், அவரது பயமற்ற அதிரடி ஆட்டத்தை மட்டுமே கவனிக்க வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கவாஸ்கர் உறுதியாகக் கூறியுள்ளார்.

இருப்பினும், தற்போதைய இந்திய டி20 அணியின் பிளேயிங் லெவனில் வைபவ் சூர்யவன்ஷியைத் தேர்ந்தெடுப்பதாக இருந்தால், தேர்வாளர்கள் தற்பொழுது ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா அல்லது சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் ஒருவரை அணியில் இருந்து நீக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com