
ராஜஸ்தான் ராயல்ஸ் உடனான உறவில் சஞ்சு சாம்சனுக்கு விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் அவர் அணியின் கேப்டன் பதவியை இழக்க நேரிடலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஐபிஎல் 2025 சீசன் முடிந்த பிறகு, அடுத்த ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்பாக தன்னை விடுவிக்கும்படி அணி நிர்வாகத்திடம் சஞ்சு கேட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது இத்தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் 14 போட்டிகளில் வெறும் நான்கு வெற்றிகளுடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது. இந்த மோசமான செயல்பாட்டினால் சாம்சன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும், சஞ்சு சாம்சன் வேறு ஒரு அணிக்காக விளையாட ஆர்வம் காட்டி வருகிறார். அதை உறுதிப்படுத்தும் விதமாக, சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்கு மாற்றிக் கொள்ள, அவருக்குப் பதிலாக ஷிவம் துபே அல்லது ரவீந்திர ஜடேஜாவைத் தரும்படி ஒரு swap deal முன்வைக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
சஞ்சு சாம்சனைப் பற்றிய இந்தத் தகவல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் விலகிய சில நாட்களிலேயே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சஞ்சு சாம்சனின் மன வருத்தத்திற்கு, ஐபிஎல் தொடரில் அணிக்கு ஏற்பட்ட மோசமான தோல்விகளும், அவருக்கு ஏற்பட்ட காயம் மட்டுமே காரணமாக இருக்காது என்றும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. "அணியின் பயிற்சியாளருக்கும், அணித்தலைவருக்கும் இடையே சாதாரணமாக ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தவிர, டிராவிட் மற்றும் சாம்சன் உறவில் எந்தப் பெரிய விரிசலும் இல்லை" என்று கிரிக்பஸ் (Cricbuzz) இணையதளம் சமீபத்தில் கூறியுள்ளது. "இருவருமே ராஜஸ்தான் அணியில் நீண்டகாலமாக இருந்தவர்கள். அவர்களின் ஒருங்கிணைப்பு அணியின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது என்று கருதப்பட்டது. இது, அவர்கள் சில போட்டிகளில் இணைந்து வெற்றி பெற்றபோது வெளிப்படையாகத் தெரிந்தது" என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
மேலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அடுத்த கேப்டன் பற்றி அணி நிர்வாகத்தில் மூன்று விதமான கருத்துகள் நிலவுவதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது. அணியின் மூன்று முக்கிய வீரர்களான சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் ஆகியோர் இடையே கேப்டன் பதவிக்கு கடும் போட்டி நிலவுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.