"இன்னும் 3 மாசம் தான் உயிர் வாழப் போறீங்க" - நம்பிக்கை இழந்து பேசிய மருத்துவர்கள் - யுவராஜ் சிங் கொடுத்த ரிப்ளை - வேற லெவல்!

என்னால் மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்குத் திரும்ப முடியும்" என்று அவர் உறுதியாகக்
 Yuvraj Singh's reply
Published on
Updated on
2 min read

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் யுவராஜ் சிங், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த காலத்தில் எதிர்கொண்ட மிகக் கொடுமையான தருணங்கள் குறித்துப் பேட்டி ஒன்றில் உருக்கமாகப் பேசியுள்ளார். 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் போது ரத்த வாந்தி எடுத்த நிலையிலும் நாட்டுக்காக விளையாடி கோப்பையை வென்று கொடுத்தவர் யுவராஜ். அந்தத் தொடர் முடிந்த கையோடு அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது ஒட்டுமொத்த இந்தியாவையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிகிச்சையின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவர் இப்போது பகிர்ந்துள்ளார்.

புற்றுநோய் பாதிப்பு தீவிரமாக இருந்த கட்டத்தில், மருத்துவர்கள் யுவராஜிடம் ஒரு கசப்பான உண்மையைச் சொல்லியுள்ளனர். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதால், இன்னும் மூன்று முதல் ஆறு மாதங்கள் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை வேலை செய்யவில்லை என்றால் மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்த மருத்துவர்கள், இந்த அதிர்ச்சித் தகவலை அவரிடம் நேருக்கு நேராகத் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த இக்கட்டான சூழலிலும் யுவராஜ் சிங் சற்றும் மனம் தளரவில்லை.

மருத்துவர்களின் அந்தத் தீர்ப்பைக் கேட்டு பயப்படுவதற்குப் பதிலாக, யுவராஜ் மிகவும் துணிச்சலாகப் பதிலளித்துள்ளார். "நான் இப்போது சாகத் தயாராக இல்லை, என்னால் மீண்டும் கிரிக்கெட் மைதானத்திற்குத் திரும்ப முடியும்" என்று அவர் உறுதியாகக் கூறியுள்ளார். அந்த நேரத்தில் அவர் பட்ட வலி மற்றும் வேதனையை விட, மீண்டும் கிரிக்கெட் பேட்டைப் பிடிக்க வேண்டும் என்ற வெறிதான் அவரை உயிர்ப்புடன் வைத்திருந்தது. மரணத்தின் விளிம்பில் நின்று கொண்டு அவர் காட்டிய அந்த மன உறுதி, அங்கிருந்த மருத்துவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் பல மாதங்கள் தங்கி மிகக் கடுமையான கீமோதெரபி சிகிச்சைகளை யுவராஜ் எதிர்கொண்டார். அந்தச் சமயத்தில் தனது தலைமுடி அனைத்தையும் இழந்து, உடல் மெலிந்து அடையாளம் தெரியாத அளவுக்கு அவர் மாறிப்போனார். ஒவ்வொரு முறை சிகிச்சை முடிந்து வெளியே வரும்போதும் கடுமையான உடல் உபாதைகளைச் சந்தித்தாலும், தனது போராட்டத்தைக் கைவிடவில்லை. தான் மீண்டும் மைதானத்திற்கு வருவேன் என்று ரசிகர்களுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்பதில் அவர் மிகத் தெளிவாக இருந்தார்.

புற்றுநோயை ஒரு போராகக் கருதி அதில் வெற்றி பெற்ற யுவராஜ் சிங், அதன் பிறகு மீண்டும் இந்திய அணிக்காக விளையாடி சாதனை படைத்தார். ஒரு சாதாரண மனிதரால் நினைத்துக்கூட பார்க்க முடியாத இந்த மீண்டு வரும் பயணம், இன்று பல புற்றுநோய் நோயாளிகளுக்குப் மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்து வருகிறது. மருத்துவர்கள் கொடுத்த கெடுவை உடைத்தெறிந்து, இன்று ஆரோக்கியமாக வாழ்ந்து வரும் யுவராஜ் சிங், தனது வாழ்க்கைப் போராட்டத்தின் மூலம் உண்மையான சாம்பியன் யார் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com