ஒரு மணி நேர மழைக்கு தாங்காத புதிய நடைமேடை!

ஒரு மணி நேர மழைக்கு தாங்காத புதிய நடைமேடை!

நாகை அடுத்த நாகூரில் 1 மணி நேர கனமழைக்கு இடிந்து உள்வாங்கிய குளத்தின் நடைமேடை  3 வடிகால் கால்வாய் இடிந்து விழுந்தது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நாகை அடுத்த நாகூர் அமிர்தா நகர் சுனாமி குடியிருப்பில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாடற்ற நிலையில் இருந்த சலவை குளத்தை 48 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரி புனரமைக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பணிகள் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து குளத்தின் தூர்வாரும் பணிகள், கம்பியினால் சுற்றுவேலி அமைத்தல், வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்து தற்போது வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய முன்தினம் 1 மணி நேரம் பெய்த கனமழைக்கே நடைமேடை உள்வாங்கியதுடன், வடிகால் இடிந்து விழுந்தது.

தரமற்ற நிலையில் கட்டப்பட்ட காரணத்தால் கனமழையால் நடைபாதை 5 அடி தூரத்திற்கு உள்வாங்கி இடிந்து விழுந்து பள்ளம் போல காட்சியளிக்கிறது, மேலும், 3 வடிகால் கால்வாய் இடிந்து விழுந்ததுடன், குளத்தின் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள, 13 சிறிய ரக வடிகால்கள் மண் அரிப்பு ஏற்பட்டு தொங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே 1 மணி நேரம் பெய்த கனமழைக்கே கட்டுமான பணிகள் கரைந்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,  மறு சீரமைப்பு செய்து கம்பி வேலியை அகற்றி தரமான முறையில் சுற்றுச்சுவர் எழுப்பவும், தரமற்ற கட்டுமான பணிகளை மேற்கொண்ட ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். நாகை அடுத்த நாகூர் அமிர்தாநகர் சுனாமி குடியிருப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு 6 மாதங்களே ஆன சலவை குளம் கனமழை காரணமாக சேதமடைந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com