மர்ம காய்ச்சலால் அவதிப்படும் கிராமம்... ஒருவர் உயிரிழப்பு!!

திருவள்ளூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.

திருத்தணி தாலுகா திருவாலங்காடு ஒன்றியம் அரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (எ) பூபாலன் . 

இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக பூபாலன் தொடர்ந்து காய்ச்சலால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பூபாலனுக்கு காய்ச்சல் அதிகமானதால் அவரது உறவினர்கள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று காலையில் பூபாலனுக்கு திடீரென்று காய்ச்சல் அதிகமாகி, வலிப்பு நோய் ஏற்பட்டது. 

உடனே அவரை மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பூபாலன் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த சில நாட்களாகவே தன்ராஜ் கண்டிகை கிராம மக்களுக்கு காய்ச்சல் பரவி வருகிறது. போதுமான சிகிச்சை மேற்கொள்ளப்படாததால், காய்ச்சல் பாதித்தவர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாக தெரிகிறது. 

இதுகுறித்து சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காய்ச்சலுக்கு உயிரிழந்த பூபாலன் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com