ராகுலின் பதவி நீக்கத்தை கண்டித்து...காங்கிரஸார் ரயில் மறியல் போராட்டம்...!

ராகுலின் பதவி நீக்கத்தை கண்டித்து...காங்கிரஸார் ரயில் மறியல் போராட்டம்...!

ராகுல் காந்தியின் பதவி பறிப்பை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட  முயன்ற போது, போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் எம்எல்ஏ பழனி நாடார் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது, போலீசார் ரயில் நிலையத்திற்கு 200 மீட்டருக்கு முன்பாக தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

அதனை தொடர்ந்து சேலம் மாநகரக மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ராகுல்காந்தியின் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் 120க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட  காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்பொழுது காட்பாடி டிஎஸ்பி  தலைமையில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com