ஈரோடு இடைத்தோ்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த மாற்றுத்திறனாளி ஒருவா் தாய்மார்களின் காலடியில் அமர்ந்து சேவையாற்ற வேண்டும் என்பதே தனது கனவு என தொிவித்துள்ளாா்.
ஈரோடு (கி) இடைத்தேர்தல் :
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறவுள்ளதால் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. அதன்படி, காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன், அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த், நாதக வேட்பாளர் மேனகா உள்ளிட்டோர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்த மாற்றுத்திறனாளி:
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மணிவண்ணன் என்பவா் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இவர், எம்.ஏ. ஆங்கிலம் படித்துள்ளதாகவும், படிப்பறிவு இல்லாத மக்களுக்கு விண்ணப்பங்களை எழுதிக் கொடுத்து சேவை செய்து வருவதாகவும் கூறினார்.
9 ஆண்டு கால கனவு :
தொடர்ந்து பேசிய அவர், தாய்மார்களின் காலடியில் அமர்ந்து சேவையாற்ற வேண்டும் என்பது தான் தனது 9 ஆண்டு கால கனவு எனவும், உயிர் உள்ளவரை அவர்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதே தனது லட்சியம் எனவும் தொிவித்தவர், அதனடிப்படையில் தான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார்.