இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட தாய்...!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டியகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். டீரைவராக இவருக்கும் தங்கமணி (26) என்பவருக்கும் திருமணமாகி 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சேலத்தில் தங்கி ஜேசிபி டிரைவராக சரவணன் வேலை பார்த்து வரும் நிலையில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் ஆண்டிகவுண்டம்பட்டியில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த தங்கமணியை பணப்பிரச்சனை தொடர்பாக அவரது மாமனார் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தங்கமணி தனது மூத்த மகளை மட்டும் வீட்டில் விட்டு விட்டு மற்றொரு 3 வது மகளான ரித்திகா, ஒன்றரை வயது மகன் லஜித் ஆகியோருடன் மாயமானார். இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் 3 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கிடையில் தான் இன்று காலை அவரது வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பயன்பாடு இல்லாத ஒரு கிணற்றின் மேல் பகுதியில் தங்கமணியின் காலணி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார், தீயணைப்பு துறை மற்றும் வருவாய்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் 3 துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அங்கு விரைந்தனர். இதையடுத்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கிய தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர தேடுதலுக்கு பின் முதலில் தங்கமணி மற்றும் அவரது மகன் லஜித் ஆகியோரின் உடல்களை மீட்டனர்.

இதையடுத்து, தனது உடலில் குழந்தைகளை துண்டால் கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து தங்கமணி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் இருவரின் உடல்களை மீட்ட தீயணைப்பு துறையினர் மகள் ரித்திகாவின் உடலையும் சுமார் ஒரு மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின் மீட்டனர். மீட்கப்பட்ட 3 உடல்களையும் மணப்பாறை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில் கணவன் வெளியூரில் இருந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மாமனார் - மாமியார் துன்றுபுறுத்தலால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இருப்பினும் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com