49 ஆண்டுகள் ஆகியும் வீரியம் குறையாத பெரியாரியம்; முதலமைச்சர் மரியாதை!

49 ஆண்டுகள் ஆகியும் வீரியம் குறையாத பெரியாரியம்; முதலமைச்சர் மரியாதை!

தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

49வது நினைவு தினம்:

பகுத்தறிவு தந்தை பெரியாரின் 49ஆவது நினைவு தினத்தை ஒட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு மலர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின்:

இந்நிலையில் சென்னை, அண்ணாசாலை சிம்ப்சன் சந்திப்பில் உள்ள தந்தை பெரியாரின் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி  மரியாதை செலுத்தினார். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு, டி.ஆர்.பாலு  மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். 

வீரியம் குறையாத பெரியாரியம்:

தொடர்ந்து, தந்தை பெரியாரின் 49-ஆவது நினைவுநாள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”வாழ்ந்தபோது எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்; நிறைந்து 49 ஆண்டுகளான பின்பும் வீரியம் குறையாமல் இருக்கிறது பெரியாரியம்; ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தே தீரும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

வைகோ மரியாதை:

இதேபோல், சென்னையில் உள்ள மதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்ட பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர் மரியாதை செலுத்திய வைகோ, பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com