"சாதிவாரி கணக்கெடுப்பிற்கு உத்தரவிட முடியாது" உயர்நீதிமன்றம் கைவிரிப்பு!

சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது

தமிழ்நாடு சட்ட பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில், அதன் தலைவர் எம். முனுசாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட சாதிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை,விருதுநகர் மாவட்டங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் அடிப்படை வசதிகள் இல்லாமல் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் மூலம், அரசின் திட்டங்கள் மூலம்  வேலைவாய்ப்பு அனைவருக்கும்  சமமாக சென்றடையும் எனவும், மிகவும் பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி தமிழக அரசிடம் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.
 
இந்த மனுவை  விசாரித்த தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு,  எந்த அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது அரசின் தனிப்பட்ட அதிகாரவரம்புக்கு உட்பட்டது என்பதால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்து விட்டது.

சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி அரசுக்கு மனு அளித்துள்ள நிலையில், இதுசம்பந்தமாக அரசை அணுகும்படி மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com