"சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்க இட ஒதுக்கீடு கொள்கை பொருந்தாது "-உயர் நீதிமன்றம்!

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு அரசாணைப்படி, 50 சதவீதத்துக்க்கு அதிகமாக சிறுபான்மை மாணவர்களை சேர்க்க கூடாது என்ற நிபந்தனையை மீறியதாக, சென்னையில் உள்ள நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரிக்கு சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்து தமிழக உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவு மற்றும், 1998ம் ஆண்டு அரசாணையின் நிபந்தனையை எதிர்த்தும், நிரந்தர சிறுபான்மை அந்தஸ்து வழங்கக் கோரியும் நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணைய சட்டப்படி, கல்வி நிறுவனங்களின் சிறுபான்மை அந்தஸ்து குறித்து முடிவெடுக்க ஆணையத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதால், சிறுபான்மை அந்தஸ்து குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் வழங்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனக் கூறி, மனுதாரர் கல்வி நிறுவனத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தை நீட்டிக்க மறுத்த அரசு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்திய அரசியல் சட்டத்தில் 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி, இடஒதுக்கீட்டு கொள்கை சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனத் தீர்ப்பளித்த நீதிபதிகள், 50 சதவீத இடங்களில் சிறுபான்மையினரை சேர்த்தாலும், மீதமுள்ள 50 சதவீத இடங்களுக்கும் தகுதி அடிப்படையில் சிறுபான்மையினர் போட்டியிடலாம் எனக் கூறி, அப்படி மாணவர்கள் சேரும் பட்சத்தில் அது 50 சதவீத கட்டுப்பாட்டை மீறியதாக கருத முடியாது என உத்தரவிட்டனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com