குல தொழிலை எப்படி தொடர்ந்து பின்பற்ற முடியும்?  அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி!

அவர்களே அர்ச்சகர் தொழிலை விட்டுவிட்டு அரசுப் பணிக்கு சென்ற பின்னர் பிற சமூகத்தினர் மட்டும் எப்படி குல தொழிலை தொடர்ந்து பின்பற்ற முடியும்? என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார். 

சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைத்த "இந்தியாவின் சமூகநீதி பெருவிழா" மதுரை உலக தமிழ்ச்சங்க அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர். பேசுகையில், "சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படாமல் உள்ளது. சமுதாயத்தை மாற்றுவதற்கு அரசு ரீதியாக சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். பிராமணர்கள் மட்டும் அர்ச்சகர்களாக கருவறைக்குள் இருந்தார்கள். தற்போது திமுக ஆட்சி அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது" எனக் கூறினார். 

சமூகத்தில் எண்ணிக்கையில் வெறும் 3% உள்ள சாதியினர் எப்படி அனைத்து அரசு பணிகளிலும் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றினார்கள்? என கேள்வி எழுப்பிய அவர், அவர்களே அர்ச்சகர் தொழிலை விட்டுவிட்டு சட்டம், மருத்துவம், அரசுப் பணிகள் உள்ளிட்ட பிற உயரிய பணிகளுக்கு சென்ற பின்னர், பிற சமூகத்தினர் மட்டும் எப்படி குல தொழிலை தொடர்ந்து பின்பற்ற முடியும்? என தெரிவித்தார். மேலும், இதன்படி குல தொழிலை ஒழிப்பதற்கு அவர்களே நமக்கு பாதையை காண்பித்துள்ளார்கள் என கூறினார்.

தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், "அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையில் சொல்லப்பட்டுள்ள அனைத்திற்கும் எதிரானது சனாதனம். இந்தியாவில் பாசிசம் என்ற சொல் தான் சனாதனம் என்ற இன்னொரு சொல்லாக உள்ளது. சனாதனம் என்றால் தொடக்கம் இல்லாதது, அழிவு இல்லாதது, மாறாதது, நிலையானது என்பது பொருள்.

வேத பரம்பரையினருக்கும் இந்தியாவின் பூர்வ குடியினருக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆரியர்களுக்கும் வேதத்திற்கும் தான் சம்பந்தம் இருக்கிறது. ஆரியர்களின் வாழ்வை தொகுப்பதற்காக எழுதப்பட்ட ஒரு நூல் தான் மனுஸ்மிருதி. மனுஸ்மிருதிக்கு எதிராக எழுதப்பட்டது தான் அரசமைப்பு சட்டம். 2000 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த சட்டத்திற்கு மாற்றாக எழுதப்பட்டது தான் அரசமைப்பு சட்டம். மனுஸ்மிருதி சட்டம் சனாதனம் பேசுகிறது. அரசமைப்பு சட்டம் ஜனநாயகம் பேசுகிறது" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வை நிலைப்படுதுவது தான் சனாதனம். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை உருவாக்கியவர்கள் சித் பவன் என்ற மகாராஷ்டிரா பிராமண சாதியினர். அது பிராமண சங்கம் தான். 
பிராமண சாதிக்குள் கூட சமத்துவம் கிடையாது. சனாதன தர்மத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது பிராமண பெண்கள் தான்.  பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு நிலையானது என சனாதனம் சொல்கிறது. இந்தியாவில் சமத்துவமும், சகோதரத்துவமும் இல்லாத ஒரு மதம் இந்து மதம் மட்டுமே. 

சாதிகளின் பெயரால் சமூகத்தை தனித்தனி தீவுகளாக பிரித்து வைத்திருப்பதன் பெயர் தான் சனாதனம். உலகம் முழுவதும் பாசிசத்திற்கு எதிரானது ஜனநாயகம். இந்தியாவில் சனாதனத்திற்கு எதிரானது ஜனநாயகம்.

பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு இல்லையென்று சொன்னால் இந்து மதத்தை தூக்கி கொண்டாட தயார். தந்தை பெரியார் பஞ்சமர்களை விட சூத்திரர்களை பற்றி தான் அதிகம் கவலைப்பட்டார். திருமாவளவனை விட மோடி, அமித்ஷாவை பற்றி தான் அதிகம் கவலைப்பட்டார் பெரியார்.

இந்தியா கூட்டணிக்குள் உள்ள இந்து பற்றாளர்களை பிரித்து இழுக்க மோடி முயற்சிக்கிறார். இந்தியாவின் பெயரை இந்து ராஷ்டிரம் என மாற்ற வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். நோக்கம். சனாதன தர்மத்தை அரசின் தர்மமாக அறிவிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்" என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com