"நீதிமன்றம் ஒன்று சொன்னால் உங்கள் போக்கில் ஒன்று செய்கிறீர்கள்" நீதிபதிகள் அதிருப்தி!

நீதிமன்றம் ஒன்று சொன்னால் உங்கள் போக்கில் ஒன்று செய்கிறீர்கள். ஏன் தேசிய நெடுஞ்சாலைத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கக்கூடாது? என சுங்கச்சாவடி நிர்வாகத்தினரை பார்த்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த  சிதம்பரம் மற்றும் பெர்டின் ராயன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தென் மாவட்டத்தில் மதுரை வழியாக தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் நான்கு வழிச்சாலையாக தேசிய நெடுஞ்சாலை NH 38 அமைந்துள்ளது. 

தினந்தோறும் சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்கள் மூலம் பல லட்ச ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் அப்பகுதியில் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை முறப்பநாடு அருகே தாமிரபரணி ஆற்றை கடக்கிறது.

இந்தச்சாலை குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் இருப்பதால் ஒருவழிப்பாதையாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமமடைந்து உள்ளனர். எனவே வாகைக்குளம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடைகோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரதசக்கரவர்த்தி அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, சுங்கக் கட்டணத்தில் 50 சதவீதம் மட்டுமே வசூலிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இடடைக்கால தடையை திரும்பப் பெறக்கோரி தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல், இடைக்கால உத்தரவை திரும்பபெறக்கோரி மனுத்தாக்கல் செய்தது ஏற்புடையதல்ல. ஒரு நாளாவது நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றி அறிக்கை தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டு இருந்தனர்.


மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.  நீதிமன்றம் ஒன்று சொன்னால் உங்கள் போக்கில் ஒன்று செய்கிறீர்கள். ஏன் தேசிய நெடுஞ்சாலைத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கக்கூடாது? சுங்கச்சாவடி திட்ட இயக்குனர்கள் நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை. சுங்கச்சாவடி திட்ட இயக்குனர்கள் தனி அதிகாரம் படைத்தவர்கள் போல செயல்படுவதா? என கேள்வி எழுப்பினர். 

நாங்கள் 50 சதவீத கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டால் நீங்களாக மனமிறங்கி கட்டண குறைப்பை செய்ததாக அறிக்கை தாக்கல் செய்துள்ளீர்கள். இந்த அறிக்கை மீது நீதிமன்றத்திற்கு திருப்தியில்லை. மனுதாரர்கள் தேவைப்பட்டால் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என தெரிவித்த நீதியரசர்கள், நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com