இந்தியா இதில் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்... இன்னும் தாமதமில்லை!!

இந்தியா இதில் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்... இன்னும் தாமதமில்லை!!

மார்ச் 22-உலக தண்ணீர் நாள் எனவும் மாற்றத்தினை விரைவுப்படுத்துதல் எனும் முழக்கத்தை முன்வைத்து, ஐநா நீடித்திருக்கும் மேம்பாட்டு இலக்குகளில் ஒன்றான தண்ணீர் - துப்புரவு குறிக்கோள்களை அடைவதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது எனவும் மருத்துவர் ராமதாஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காலநிலை மாற்றம்:

தண்ணீர் நெருக்கடியால் அதிகம் பாதிப்படையும் பகுதிகளில் ஒன்றாக தமிழ்நாடும் இருக்கிறது எனவும் காலநிலை மாற்றத்தின் காரணமாக வறட்சி அதிகமாகிறது எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் மிகக் குறுகிய காலத்தில் மிக அதிக அளவு மழைப் பொழிவும் ஏற்படுகிறது எனினும் இவற்றால் தமிழ்நாட்டின் தண்ணீர் நெருக்கடி மென்மேலும் மோசமடையும் நிலையே உள்ளது எனவும் கூறியுள்ளார் மருத்துவர் ராமதாஸ்.

போர்க்கால அடிப்படையில்:

எனவே, தமிழ்நாட்டின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் காப்பாற்ற போர்க்கால வேகத்தில் நீர்வள ஆதாரங்களை காப்பாற்றவும் மேம்படுத்தவும் வேண்டும் எனவும் அதற்கான அனைத்து பணிகளையும் மத்திய, மாநில, உள்ளாட்சி அரசுகள் உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாகவும் பதிவிட்டுள்ளார்.

தூக்குத்தண்டனை:

தூக்குத் தண்டனை கொடியதாக இருப்பதால், அதைவிட வலிகுறைந்த, கண்ணியமான முறையில் சாவுத் தண்டனையை நிறைவேற்ற முடியுமா? என்பதை ஆராய குழு அமைக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என்பதிக் குறிப்பிட்ட ராமதாஸ் உச்சநீதிமன்றத்தின் பார்வை சரியானதாக இருக்கலாம்; ஆனால், அது தீர்வல்ல எனத் தெரிவித்துள்ளார்.

திருத்துவதே..:

குற்றம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையின் நோக்கம் அவர்களைத் திருத்துவது தான் எனவும் அதற்கு சிறை தண்டனையே சரியானதாக இருக்கும் எனவும் கூறிய ராமதாஸ் குற்றமிழைத்த மனிதர்களுக்கு திருந்தி வாழ வாய்ப்பு அளிக்காமல், அவர்களின் வாழ்க்கையையே முடிப்பது இயற்கை நீதியாக இருக்காது எனவும் பதிவிட்டுள்ளார்.

ஒழிக்க வேண்டும்:

உலகில் 111 நாடுகளில் சாவுத்தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது எனவும் 24 நாடுகளில் அது  நடைமுறையில் இல்லை எனவும் கூறியுள்ளார் ராமதாஸ்.  அதனைத் தொடர்ந்து உலகிற்கே நாகரிகத்தை கற்றுக்கொடுத்த இந்தியா சாவுத்தண்டனை ஒழிப்பில் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ள அவர்  இனியாவது சாவுத்தண்டனையை ஒழிக்க வேண்டும் அனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com