
ராணிப்பேட்டை அருகே ஒரே பள்ளியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மஞ்சக்காமலை, காய்ச்சல் போன்ற நோயால் பாதிப்புக்குள்ளானதையடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் நரசிங்கபுரம் பகுதியில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில் 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மஞ்சக்காமலை, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டி, ஆழ்த்துளைக் கிணறு ஆகியவற்றில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முன்னதாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.