மக்கள் உறுப்புதானம் செய்ய தாமாக முன்வந்தாலும், மருத்துவமனைகள் ஏற்றுக்கொள்ளாதது வருத்தமளிக்கிறது” - சென்னை உயர்நீதிமன்றம்

மக்கள் உறுப்புதானம் செய்ய தாமாக  முன்வந்தாலும்,  மருத்துவமனைகள்  ஏற்றுக்கொள்ளாதது வருத்தமளிக்கிறது” -  சென்னை உயர்நீதிமன்றம்

உறவினர்கள் அல்லாதவர் உறுப்பு தானம் வழங்க முன்வரும் போது, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள் மறுப்பது சட்ட விரோதம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்ட மருத்துவர் காஜா மொய்னுதீனுக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அவரது மனைவி  மற்றும் குழந்தைகளிடம் இருந்து சிறுநீரகம் பெற முடியவில்லை. இதனால் ராமாயி என்பவர், அன்பு பாசம் காரணமாக சிறுநீரகம் தானம் அளிக்க முன்வந்தார்.

அதன் அடிப்படையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, கேரளாவின் கொச்சியில் உள்ள மருத்துவமனை அறுவை சிகிச்சை செய்ய முன்வந்தது.

ஆனால் தமிழ்நாடு அரசிடம் உறுப்பு மாற்று சிகிச்சை தடையில்லா சான்று பெற்று வருமாறு தெரிவித்ததால்,  தடையில்லா சான்றிதழ் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி  காஜா மொய்தீன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தில், உறவினர்கள் மட்டுமே  உறுப்பு தானம் செய்ய முடியும் எனக் கூறப்படாத நிலையில், பல உயிர்களை காப்பாற்றிய மருத்துவர், தனது உயிரை பாதுகாக்க இயலாத நிலையில் தவிப்பதாக தெரிவித்துள்ளார்.

உறவினர்கள் அல்லாதவர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய விதிகளும், நடைமுறைகளும் உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுப்பது சட்டவிரோதமானது என தெரிவித்த நீதிபதி,  மனுதராரும்,  நன்கொடையாளரும் ஒரு வாரத்தில் மருத்துவ குழு முன்பு ஆஜராக வேண்டும் எனவும்,  சிறுநீரக நன்கொடை குறித்து கோவை தாசில்தாரர் உரிய விசாரணை நடத்தி  உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தில் விதியின் கீழ்  அங்கீகார குழுவுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அறிக்கை மீது அங்கீகார குழு, நான்கு வாரங்களில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

போதிய சட்ட விழிப்புணர்வு இல்லாததால், உறவினர் அல்லாதவர் உறுப்பு தானம் அளிக்க முன் வரும் போது, அறுவை சிகிச்சை செய்ய தயக்கம் காட்டுவதாக குறிப்பிட்ட நீதிபதி, இதுகுறித்து மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும்  தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com