மாநில அரசு சுங்க கட்டணத்தை நீக்குமா? - அமைச்சரின் பதில் என்ன?

மாநில அரசு சுங்க கட்டணத்தை நீக்குமா? - அமைச்சரின் பதில் என்ன?

மாநில அரசு சுங்க கட்டணத்தை நீக்க வேண்டும், குறைக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும், சுங்க கட்டணம் முழுமையாக எடுக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம் எனவும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில், சுங்க கட்டண உயர்வு குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.அன்பழகன், வேல்முருகன் ஆகியோர் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பல்வேறு மனுக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்துள்ளதாகவும், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் 6805 கி.மீ நீளம் கொண்டவை என்றும், அதில் 58 சுங்கச்சாவடிகள் உள்ளதாகவும், மத்திய அரசு நடைமுறையில் உள்ள சட்டப்படியே  சுங்க கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருவதாகவும், 36 சுங்க சாவடிகளில் சுங்கக் கட்டணம் அரசு தனியார் மூலம் வசூலிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

அதேபோல், மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்கும் போதெல்லாம் தமிழகத்தில் சுங்கச்சாவடியை அகற்ற கோரிக்கை வைப்பதோடு, சுங்க கட்டணத்தை நீக்கவும், குறைக்கவும் கடிதம் எழுதி வருவதாகவும், கடந்த 18.3.23ம் தேதியும் இறுதியாக கடிதம் அனுப்ப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சுங்கச்சாவடிகளில் பராமரிப்புக்காக கட்டணம் வசூலித்தாலும், 40 சதவீதத்திற்கும்  குறைவாகவே கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என கூறிய அமைச்சர், திமுக அரசை பொருத்தவரை சுங்க கட்டணத்தை முழுமையாக  நீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com