தமிழக எல்லையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய கர்நாடக மாநிலத்தவர் கைது!

ஆந்திர, தமிழக எல்லையில் உள்ள வனப்பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டி சென்ற கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மருந்து கடை உரிமையாளரை பேரணாம்பட்டு வனத்துறையினர் கைது செய்துள்ளனர். 

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக ஆந்திரா எல்லையான பத்தலப்பல்லி  வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலாவதியான மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை கொட்டி விட்டு சென்றுள்ளனர். மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில்  வைரலானது. 

இது குறித்து தகவலறிந்த வேலூர் மாவட்ட வன அதிகாரி கலாநிதி உனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பேரணாம்பட்டு வனத்துறையினர்க்கு உத்தரவிட்டார். இதனையடுத்து பேரணாம்பட்டு வனத்துறையினர் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட வனப்பகுதியில் சோதனை செய்தனர்.

மேலும் மருத்துவ கழிவுகளில் மருந்து சீட்டு கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக மருந்து சீட்டில் காணப்பட்ட செல்போன் எண்ணை  தொடர்பு கொண்டு வனத்துறையினர் பேசி அந்த நபரை வனத்துறையினர்  பேரணாம்பட்டு வனசரக அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். அருகே உள்ள கோரமண்டல் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் ராஜேந்திர பிரசாத் (48) என்றும் கடந்த 5 தினங்களுக்கு முன்பு மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து தமிழக ஆந்திரா எல்லையிலுள்ள பத்தலப் பல்லி வனப்பகுதியில் கொட்டி விட்டு சென்றுள்ளார் என்பதும், மருந்து சீட்டின் மூலம் பேரணாம்பட்டு வனத்துறையினரிடம் சிக்கியதும் தெரியவந்தது.

பத்தலப்பல்லி காப்புக் காட்டில் அத்துமீறி நுழைந்து வனவிலங்கள் பாதிக்கும் வகையில் மருத்துவ கழிவுகளை கொட்டியதாக  மருந்து கடை உரிமையாளர் ராஜேந்திர பிரசாத்தை வனத்துறையினர்  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com