"இரு சமூகத்தினருக்கும் நடுவில் சமரசம்": மீண்டும் திறந்து வைக்கப்பட்டது கரூர் கோவில்!

"இரு சமூகத்தினருக்கும் நடுவில் சமரசம்": மீண்டும் திறந்து வைக்கப்பட்டது கரூர் கோவில்!

சில நாட்களுக்கு முன்பு, கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோவிலுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கரூரில், இரு சமூகத்தினருக்கு நடுவில் கருத்து வேறுபாடு பிரச்சனையால், பூட்டப்பட்ட கோவில், இன்று மாவட்ட ஆட்சியரால் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள வீரணம்பட்டி ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழாவில் பட்டியலின இளைஞரை கோவிலின் உள்ளே விடாமல் தடுத்ததாக கூறப்பட்ட நிலையில், இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஊர் கலவரம் ஆனதால், குளித்தலை ஆர்டிஓ புஷ்பாதேவி  கோவிலின் கதவை பூட்டி சீல் வைத்தார்.

பின்னர் அதன் விளைவாக, கோயிலுக்கு சீல் வைத்ததை கண்டித்து ஒரு தலைப்பினர் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் பேரணி போன்ற போராட்டங்கள் நடத்தினர். மற்ற தரப்பினர் தங்கள் சமுதாயத்தை சேர்ந்த இளைஞரை கோவிலுக்கு வரவிடாமல் தடுத்து தாக்கியது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் இளைஞரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் எனபோராட்டம் நடத்தினர். இரு தரப்பினரும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதால், இரு தரப்பினர் மீதும் காவல்துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், இரு சமூகத்தினருக்கும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதைத் தொடர்ந்து, கோவிலை திறக்கும் முடிவுக்கு வந்தனர். அதன்படி, இன்று, மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபு சங்கர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து, இருதரப்பு மக்கள் முன்னிலையில்  கோயிலை பொதுமக்கள் வழிபடும் வகையில் திறந்து வைத்தனர். 

பலத்த போலீஸ் பாதுகாப்புகளுக்கு இடையே இந்த நிகழ்ச்சி அமைதியாக நடைபெற்றது. இரு சமூத்தை சேர்ந்தவர்களும், மகிழ்ச்சியுடன் இவ்விழாவில் கலந்துகொண்டு, கோவிலை திறந்து வைத்துள்ளனர். 

பின்னர், இது குறித்து கலெக்டர் பிரபு சங்கர் பேசுகையில்," இரு தரப்பு மக்களிடையே ஏற்பட்ட வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டு கோவில் சீல் வைக்கப்பட்டது. இப்பொழுது இரு தரப்பினரும் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதால், இரு தரப்பினர் முன்னிலையிலும் கோயில் திறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவிற்கு முன்மாதிரியாக இருக்கும். எல்லா இடங்களிலும், கோயில்களிலும் அனைவரும் சமம். அனைவருக்கும் வழிபாடு செய்ய உரிமை உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த கரூர் மாவட்டம் வீரணம்பட்டி கோயில் நிகழ்வு நடைபெற்று உள்ளது" என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த பகுதிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் மற்றும் சாலை வசதி குடிநீர் வசதிக்காக ஒரு கோடி 50 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்பதையும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com