நில ஒதுக்கீடு ஊழல்... அமைச்சர் பெரியசாமிக்கு தண்டனை?!!

நில ஒதுக்கீடு ஊழல்... அமைச்சர் பெரியசாமிக்கு தண்டனை?!!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீடு கட்டுவதற்கான நிலத்தை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புகார் என்ன?:

கடந்த 2008ம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீடு கட்டுவதற்கான நிலத்தை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு நடந்த தாக புகார் கூறப்பட்டது.

லஞ்சப் புகார்:

புகார் தொடர்பாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த  2012ம் ஆண்டு , அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

விசாரணை:

வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் வழக்கறிஞர்கள் ரகுநாதன் மற்றும் ஏ.சரவணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.  விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதனால் வீட்டு வசதி வாரிய துறைக்கு எந்த ஒரு இழப்பும் ஏற்படவில்லை என்றும் சந்தை விலைக்குதான் விற்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். 

ஆதாரம் இல்லை:

இதற்கு அமைச்சர் உடந்தையாக இருந்தார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரங்கள் இல்லை என்றும் சுட்டிக்காட்டினர். மேலும் வழக்கு தொடர்வதற்கு முறையான அனுமதி பெறவில்லை என்றும் , புகாருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வாதிட்டனர். 

தீர்ப்பு:

அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.  வாதங்களை  ஏற்றுக்கொண்ட நீதிபதி, அமைச்சர் ஐ.பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்து,  உத்தரவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com