நீலகிரி : தொடர் கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு...பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நீலகிரி : தொடர் கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு...பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  

நீலகிரி மாவட்டத்தில், உதகை, குன்னூர், கோத்தகிரி, பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.  நாடுகானி நகர் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு தேனீர் கடையின் சுவர் இடிந்து விழுந்தது. கடை பூட்டப்பட்டிருந்ததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. 

அத்துடன் உதகை, கோத்தகிரி சாலையில் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு கருதி நெடுஞ்சாலைத் துறையினர் அபாயகரமான மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர். 

மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில், அதிக பட்சமாக அவலாஞ்சியில் 20 புள்ளி 4 செட்டி மீட்டர் மழையும், அப்பர் பவானியில் 11 சென்டி மீட்டர் மழையும், சேரங்கோடு பகுதியில் 9 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் தாழ்வான பகுதிகளை நோக்கி நீர் பாய்ந்தோடுகிறது.  

42 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் அரகோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட நிலையில், அவர்கள் கூடலூர் மற்றும் மஞ்சூர் பகுதியில் தயார் நிலையில் உள்ளனர். அத்துடன் பொதுமக்களை பாதுகாப்புடன் தங்க வைக்க 43 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

கனமழை காரணமாக உதகை படகு இல்லத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com