வங்ககடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்ககடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஜூலை மாதத்தில் மட்டும் அதிக மழைப்பொழிவு பதிவானதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கிடையே தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நாளை உருவாக இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றே உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நீலகிரி, கோவை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்யக்கூடும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அதே பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுவதாகவும், இதனால்  வருகிற 24-ஆம் தேதி வரை இந்தியாவின் மத்திய பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திர கடலோர பகுதிகள், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், விதர்பா மற்றும் கிழக்கு மத்திய பிரதேச பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதோடு, கடல் சீற்றத்துடன் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதே பகுதிகளில் வருகிற 27ஆம் தேதி மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com