"உள்ளாட்சி தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு" சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

"உள்ளாட்சி தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு" சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த நைனார்குப்பம் கிராமத்தில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிலம் ஒதுக்கிய அரசு, அதற்கான பட்டாவும் வழங்கியது.

இந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டுமென கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கிராம பஞ்சாயத்து தலைவர் மோகன், இதுசம்பந்தமாக மாவட்ட ஆட்சியருக்கும் மனு அனுப்பியுள்ளார். கடந்த மே மாதம் அளிக்கப்பட்ட அந்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி பஞ்சாயத்து தலைவர் மோகன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கிராம பஞ்சாயத்து தலைவர் மோகன் நேரில் ஆஜராகி, மூன்றாம் பாலினத்தவர் உரிமை பற்றி முழுமையாக தெரியாமல் தீர்மானம் நிறைவேற்றியதாகவும், வழக்கு தொடர்ந்துவிட்டதாகவும் கூறி, வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

பஞ்சாயத்து தலைவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பியதாகவும், அதற்கு மனுதாரர் பதிலளித்துள்ளதாகவும்  மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரிய மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மூன்றாம் பாலினத்தவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என  தெரிவித்துள்ளார்.

பட்டா வழங்கியதை எதிர்த்த பஞ்சாயத்து தலைவரின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, தீர்மானம் நிறைவேற்றிய பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதி அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். 

மேலும், சமுதாயத்தில் சில பிரிவினரால் தவறான முறையில் நடத்தப்படும் மூன்றாம் பாலினத்தவர்களை, சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில்  இணைக்கும் வகையில்,  உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மூன்றாம் பாலினத்தவருக்காக அரசு பல்வேறு சட்டங்களையும் கொள்கைகளையும் வகுத்தபோதும் கூட, அவை முழு அளவில் அமல்படுத்தப்படவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, மூன்றாம் பாலினத்தவர்கள் கிராம திருவிழாக்களில் கலந்து கொள்வதையும், கோவில்களில் வழிபாடு செய்வதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com