அமைச்சர் பொன்முடி, கௌதம சிகாமணியிடம் கிடுக்குப்பிடி விசாரணை..!

அமைச்சர் பொன்முடி, கௌதம சிகாமணியிடம் கிடுக்குப்பிடி விசாரணை..!
Published on
Updated on
2 min read

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெயரில் வங்கிகளில் இருந்த 41 புள்ளி 9 கோடி ரூபாய் நிரந்த வைப்புத் தொகை முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

சட்ட விரோத பண பரிமாற்றம் மற்றும் அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக, சென்னை மற்றும் விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் இறுதியில் சென்னையில் உள்ள பொன்முடியின் வீட்டில் இருந்து, கணக்கில் வராத வெளிநாட்டு கரன்சி உட்பட 70 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், டைரி உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

நேற்று காலை முதல் சுமார் 13 மணி நேர சோதனைக்கு பிறகு, இரவு 8 மணி அளவில் அமைச்சர் பொன்முடி விசாரணைக்காக சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்கு பிறகு அமைச்சர் பொன்முடி அதிகாலையில் வீடு திரும்பினார். 

அதேநேரத்தில், இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை சம்மன் அளித்ததை அடுத்து, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி ஆகியோர் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடியுடன் அவரது வழக்கறிஞரும் ஆஜர் ஆனார்.

அமலாகத்துறை அலுவலகத்தில் 3-வது தளத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில்,  சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரொக்கப் பணம் மற்றும் தரவுகளின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இதனிடையே, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெயரில் வங்கிகளில் இருந்த 41 புள்ளி 9 கோடி ரூபாய் நிரந்த வைப்புத் தொகை முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும், சோதனையின் போது 81.7 லட்சம் ரூபாய் ரொக்கம், 13 லட்சம் மதிப்பு வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com