கேள்வி நேரத்தில் பதிலளிக்கவுள்ள அமைச்சர்கள்...கேள்விகள் என்ன?!

கேள்வி நேரத்தில் பதிலளிக்கவுள்ள அமைச்சர்கள்...கேள்விகள் என்ன?!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில், சில முக்கிய அறிவிப்புகளும் மத்திய அரசை வலியுறுத்தும் அம்சங்களும் இடம்பெற வாய்ப்புள்ளது.

வெளியேறிய ஆளுநர்:

சட்டப்பேரவையில் வழக்கமான ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது.  கடந்தாண்டு சட்டப்பேரவை முதல் கூட்டம் கொரோனா பரவல் காரணமாக 
கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு வழக்கமாக புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள பேரவைக் கூட்ட அரங்கிலேயே நடத்தப்பட்டு வருகிறது.  ஆளுநர் உரையின்போது பெரியார், அம்பேத்கர், திராவிட மாடல், சமூகநீதி, பெண்ணுரிமை உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்க மறுத்த ஆர்என் ரவிக்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.  இதனை முதலமைச்சர் அவையிலேயே கண்டித்த நிலையில், பாதியிலிலேயே ஆளுநர் வெளியேறினார்.

இரங்கல் நிகழ்வு:

தொடர்ந்து இரண்டாம் நாள் கூட்டம் நேற்று சட்டப்பேரவையில் தொடங்கியது. அப்போது சின்னசாமி, தில்லை காந்தி என்கிற ஆதிமூலம், துரை கோவிந்தராசன், சோமசுந்தரம் ஆகியோருக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசித்தார்.  கால்பந்து வீரர் பீலே, திருமகன் ஈ.வெ.ரா, மஸ்தான், நெடுஞ்செழியன், ஆரூர் தாஸ், அவ்வை நடராசன், மனோகர் தேவதாஸ் ஆகியோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  இதைத்தொடந்து அவை நடவடிக்கைகள் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

வினா- விடை நேரம்:

இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை பேரவை கூடியதும் மறைந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் புருடோத்தமன் மறைவிற்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும்.  இன்றைய வினாக்கள் விடைகள் நேரத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, சாமிநாதன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, சேகர்பாபு, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பதிலளித்து பேசவுள்ளனர். 

பின்னர் பூஜ்ய நேரத்தில், எதிர்கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு முக்கிய பிரச்சனை குறித்து கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com