டாஸ்மாக் ஊழியர்கள் வெல்ல நாம் தமிழர் கட்சி துணை நிற்கும்....சீமான் உறுதி!!

டாஸ்மாக் ஊழியர்கள் வெல்ல நாம் தமிழர் கட்சி துணை நிற்கும்....சீமான் உறுதி!!

ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

கொத்தடிமைகள் போல:

நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஓர் அங்கமாகச் செயற்பட்டு வரும் மதுபான சில்லறை விற்பனைக் கூட ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது எனவும் 21 ஆண்டுகளாக டாஸ்மாக் ஊழியர்கள் பணியாற்றியும் இதுவரை உரிய ஊதியம் கூட வழங்காமல் கொத்தடிமைகள் போல நடத்தும் தமிழ்நாடு அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாத கொடுங்கோன்மையாகும் எனவும் கூறியுள்ளார்.

அடிப்படை உரிமைகள்:

மேலும் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்தி, அதில் பணியாற்றும் ஊழியர்களை வேறு அரசுப் பணிகளுக்கு மாற்றவேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் முதன்மையான நீண்டகாலக் கோரிக்கை என்ற போதிலும், மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வரை, அதில் பணியாற்றும் 27000 ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதிலும் நாம் தமிழர் கட்சி உறுதியாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம்:

அதனை தொடர்ந்து கடந்த 21 ஆண்டுகளாக மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றிவரும் உதவி விற்பனையாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு இன்றுவரை தொகுப்பூதியத்தின் கீழ் மிகக் குறைந்த அளவு ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது எனவும் அவர்கள் அனைவரையும் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இதர விற்பனைப் பிரிவுகளான அமுதம் அங்காடி, ஆவின் மற்றும் பூம்புகார் கைவினைக் கூடங்களில் பணிபுரியும் ஊழியர்களைப் போன்று காலமுறை ஊதியத்துக்கு மாற்றி உடனடியாகப் பணி நிரந்தரமும் செய்திட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

வழிகாட்டு நெறிமுறைகள்:

மேலும், டாஸ்மாக் ஊழியர்களை ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப பந்தாடுவதைத் தடுக்க, அவர்களின் பணியிட மாறுதலுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் ஆகவே, தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனைக் கூட ஊழியர்களின் மேற்கண்ட நியாயமான கோரிக்கைகளை இனியும் காலந்தாழ்த்தாமல் தமிழ்நாடு அரசு நிறைவேற்றித்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.

டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது ஆதரவினை அளித்து, கோரிக்கைகள் வெல்ல துணை நிற்கும் என்று உறுதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com