தனியார் நிகழ்ச்சிக்கு பரிந்துரை கடிதம் கொடுக்கவில்லை - நீதிபதி வள்ளிநாயகம்

தனியார் நிகழ்ச்சிக்கு பரிந்துரை கடிதம் கொடுக்கவில்லை - நீதிபதி வள்ளிநாயகம்

சர்ச்சை

கடந்த 26 -ம் தேதி கிண்டி அண்ணா பல்கலைக்கழக அரங்கில் இன்டர்நேஷனல் ஆன்ட்டி கரெக்ஷன் அண்ட் ஹியூமன் ரைட்ஸ் கவுன்சில் என்ற அமைப்பின் பெயரில் நடிகர் வடிவேலு உள்ளிட்ட பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் போலியானது என சர்ச்சை எழுந்துள்ளது.

அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ்

இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் பெயரிலான பரிந்துரை கடிதத்தினாலேயே மறுக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டதாகவும், கடிதத்தின் உண்மை தன்மையை பரிசோதிக்காமல் வழங்கியது தவறு தான் எனவும் அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

நீதிபதி வள்ளி நாயகம் மறுப்பு

இந்தநிலையில்,  பரிந்துரை கடிதம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளி நாயகம் மறுப்பு தெரிவித்துள்ளார்.அவர் விளக்கம் அளித்ததில், "நிகழ்வில் என்னை அழைத்தார்கள் நான் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சி சரியா தவறா என எனக்கு தெரியாது என்னை அழைத்தார்கள் நான் சென்று கலந்து கொண்டேன்.

தற்போது பார்த்தால் என்னுடைய கையெழுத்தையே அவர்கள் தவறாக பயன்படுத்தி உள்ளதாக தெரியவந்துள்ளது. அது தொடர்பாக புகார் ஒன்று கொடுக்கப்பட உள்ளது.ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள். நானே பரிந்துரை கடிதம் கொடுப்பேனா? 

செய்திகள் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்

20 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன். அண்ணா பல்கலையிலேயே 10 - 15 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன்.சமூகத்தில் சேவையாற்றியதற்காக என்னை மதித்து அழைக்கிறார்கள். நான் கலந்து கொண்டு வருகிறேன்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தனியார் விடுதியில் ஒரு நிகழ்வு அழைத்திருந்தார்கள் அன்றும் கலந்து கொண்டு வந்தேன் இது மாதிரி ஒரு ப்ரோக்ராம் நடத்தவில்லை. 

இதுபோல நிகழ்வுக்கு என்னுடைய உதவியாளரிடம் நேரம் கேட்டுள்ளார்கள். எனது உதவியாளரும் கூறினார். கலந்து கொண்டு வந்தேன்.பரிந்துரை கடிதத்தில் நான் கையெழுத்து போடவில்லை. இது போன்ற கடிதங்களில் நானே கையெழுத்து போடுவேனா? அந்த கடிதத்தை நான் பார்க்கவில்லை. என்னுடைய உதவியாளரிடம் சொல்லி வழக்கு பதிவு செய்ய சொல்லியுள்ளேன்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து என்னிடம் எந்தவிதமான விளக்கமும் கேட்கவில்லை. செய்திகள் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்", என தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com