வேளச்சேரி: ராட்சச பள்ளத்தில் விழுந்தவரின் உடலை உறவினர்கள் வாங்க மறுப்பு...!

வேளச்சேரியில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பள்ளத்தில் விழுந்த ஜெயசீலனின் உடலை உறவினர்கள் வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை வேளச்சேரியில் கட்டுமான நிறுவனம் தோன்றிய ராட்சத பள்ளம், மிக்ஜாம் புயலால் சரிந்து விழுந்தது. இதில் சிக்கிக்கொண்ட இரண்டு நபர்களை நான்கு நாட்களுக்கு பின்பு நேற்றைய தினம் மீட்டனர். அதில் நரேஷ் என்பவரின் உடல் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதேபோல், நேற்று மதியம் ஜெயசீலன் என்பவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜெயசீலனின் உறவினர்கள் கையொப்பமிட்டால் மட்டுமே பிரேத பரிசோதனை நடைபெறும். ஆனால், உயிரிழந்த ஜெயசீலனின் உடலை வாங்குவதற்கு உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், குறிப்பாக  உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com