தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி பட காட்சிகள் ரத்து

தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி பட காட்சிகள் ரத்து

தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால் தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் ‘தி கேரளா ஸ்டோரி’. மேற்கு வங்கத்தை சேர்ந்த இயக்குநர் சுதிப்தோ சென், இந்த படத்தின் மூலம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா, பிரணாய் பச்செளரி, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'தி கேரள ஸ்டோரி' படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

 டீசர் வெளியாகி பெரும் சர்ச்சை


இந்த டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் இது கேரளாவைச் சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதற்கு அப்போதே சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர்.இதையடுத்து இந்த படத்தின் அடுத்த அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்த படத்தின் ட்ரைலரில் 3 மாற்று மத பெண்களும், ஒரு இஸ்லாமிய பெண்ணும் கல்லூரியில் நண்பர்களாகின்றனர். அந்த இஸ்லாமிய பெண்ணின் உதவியோடு மீதம் இருக்கும் பெண்களை மதமாற்ற செய்யும்படி செய்கின்றனர்.

ISIS அமைப்பில் இணைவது போன்ற காட்சி 

அதற்கேற்றாற்போல் ஒரு சூழலை உருவாக்கி நம்மை இவரால் மட்டும்தான் காப்பாற்றமுடியும் என்று அந்த பெண்களை நம்பவைத்து ஹிஜாப் அணியவைத்து அப்படியே மதம் மாற்றம் செய்கின்றனர். பின்னர் அவர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்ய வைத்து, அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு ISIS அமைப்பில் இணைத்து விடுகின்றனர்.மேலும் இது ஒரு உண்மை கதை என்றும், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவதாகவும் அந்த ட்ரைலரில் இடம்பெற்றிருந்தது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 32000 பாதிக்கப்பட்ட பெண்களை மாற்ற வேண்டும்

இதற்கு கேரளா சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சிகள், முதலமைச்சர் பினராயி விஜயன் வரை பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். மேலும் முஸ்லீம் அமைப்புகள் இந்த படத்துக்கு தடை கோரி போராட்டங்களும் நடத்தினர். தொடர்ந்து இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் இந்த படத்துக்கு தடை விதிக்கமுடியாது என்றும், மாறாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 32000 பாதிக்கப்பட்ட பெண்களை மாற்ற வேண்டும் என்றும் கூறியது.

இதையடுத்து 32000 பாதிக்கப்பட்ட பெண்கள் என்பதற்கு பதில் 3 பெண்கள் என மாற்றப்பட்டது. இந்த படம் மதநல்லிணக்கத்துக்கு இடையூறு விளைவிப்பதாக பல்வேறு மாநிலங்களில் பலரும் போராடினர், கண்டனம் தெரிவித்தனர். இருப்பினும் கடந்த 5-ம் தேதி இந்த படம் நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. தமிழ்நாட்டிலும் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளியானது.
இந்த சூழலில் இந்த படத்திற்கு இஸ்லாமிய தரப்பில் இருந்து பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து திரையரங்குகள் முன் போராட்டங்களும் நடத்தினர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புகள் நிலவியதால் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தின் காட்சிகள் அனைத்து திரையரங்குகளிலும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com