மகிழ்ச்சி தந்த மழை... சோகத்தை ஏற்படுத்திய மின்னல்...!!!

மகிழ்ச்சி தந்த மழை... சோகத்தை ஏற்படுத்திய மின்னல்...!!!

தமிழ்நாட்டில் வெப்பச் சலனம் காரணமாக  பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். 

மக்கள் மகிழ்ச்சி:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள நொச்சிமலை, நாவக்கரை, ஏந்தல், நல்லவன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காற்று இடியுடன் பலத்த மழை பெய்தது.  இதன் காரணமாக  விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

திடீர் மின்னல்:

திருவண்ணாமலை  அண்டம்பள்ளம் கிராமத்தை சேர்ந்த முருகன் சித்ரா தம்பதியினரின் மகள் அவரது பாட்டியின் நிலத்தில் மணிலா விதைக்கும் பணியை மேற்கொண்ட போது திடீரென பெய்த மழையின் போது இடி மின்னல் தாக்கியது.  இதில்  சம்பவ இடத்தில் மாணவி  பரிதாபமாக உயிரிழந்தார்.  இடி மின்னல் தாக்கி உயிரிழந்த வினோஷாவின் உடலை பார்த்து  உறவினர்கள் கதறி அழுத காட்சி கலங்க வைத்துள்ளது.

விவசாய நிலத்தில்:

இதேப்போல், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டார பகுதியில் திடீரென சூறாவளி காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது.  அப்போது பீரங்கிமேடு கிராமத்தில் விவசாய நிலத்தில் நடவு நட்டு கொண்டு இருந்த இரு பெண்கள் மீது மின்னல்  தாக்கியது.  படுகாயமடைந்த அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முன்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மரத்தின் கீழ்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மழை பெய்ததால்,  புளிய மரம் ஒன்றின் கீழ்  நின்றுள்ளார்.  அப்போது இடி தாக்கியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து  போலீசார் வழக்கு  பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்னை மரம் விழுந்து:

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள பள்ளிப்பட்டு பகுதியில்  கடுமையான மழை காரணமாக தென்னை மரம் விழுந்து முதியவர் குப்பையா பரிதாபமாக உயிரிழந்தார்.  மேலும், படுகாயமடைந்த அவரது மனைவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே துயரத்தை ஏற்படுத்தி  இருக்கிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com