சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ”ரோல் மாடல்” உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர் சி.வி.கணேசன்!

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ”ரோல் மாடல்” உதயநிதி ஸ்டாலின் - அமைச்சர் சி.வி.கணேசன்!

தமிழ்நாட்டில் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ”ரோல் மாடலாக” உதயநிதி ஸ்டாலின் இருப்பதாக அமைச்சர் சி.வி.கணேசன் கூறியுள்ளார்.

சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு திறன் போட்டிகள் - 2023 க்கான லட்சினை மற்றும் இணையதள இணையபதிவு தொடக்க விழாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி   வைத்தார். இந்நிகழ்ச்சியில் உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து இந்நிகழ்ச்சியில், கடந்த ஆண்டு நடைபெற்ற உலகத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனுஸ்ரீ, சுபசீஸ் பால், சரஸ்வதி ஆகிய மூன்று வெற்றியாளர்களும், இந்திய திறன் போட்டி வெற்றியாளர்களும் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அதனை தொடர்ந்து "ஸ்கில் ஆன் வீல்ஸ்" என்ற நடமாடும் திறன் ஊர்தியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களால் அமைக்கப்பட்ட திறன் காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், தமிழகத்தில் நான் முதல்வன் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் கல்லூரி மாணவர்களும் தங்களது தனி திறன்களை அறிந்து அவர்களுடைய திறன்களை அதிகரித்து, வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுக்காக தான் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அதிகமாக பாடுபட்டு வருகிறார். தொடர்ந்து பேசிய அவர், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு எல்லாம் ”ரோல் மாடல்” ஆக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்று பெருமிதம் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com