உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று....!

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று....!

இன்று காலை தொடங்கி உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெறுகிறது. வெட்டிவேர் மற்றும் நறுமண மலர்களால் திருக்கல்யாண மேடை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
 
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும்.  அதிலும் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழாவாக நடைபெறும். இந்தாண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரைதிருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

ஒவ்வொரு நாளும் அம்மனும் சுவாமியும்  வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும்  வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 8ஆம் நாளில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினமும், 9ஆம் நாள் நிகழ்வாக நேற்றிரவு இரவு திக் விஜயமும் நடைபெற்று முடிவடைந்த நிலையில் சித்திரை திருவிழாவின் 10ஆம் நாள் நிகழ்வான விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் மீதுன லக்கனத்தில் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு கோவில் வடக்கு ஆடி, மேல ஆடி சந்திப்பில் நறுமணம் மிக்க வெட்டிவேர்கள் மற்றும் பல வகை வண்ணப்பூக்களால் திருக்கல்யாண மேடை அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் மேடையில் அலங்கார வளைவுகளில் வெண்மையை எடுத்துரைக்கும் வகையில் பச்சரியால் அலங்கரிப்பட்டுள்ளது. இதனிடையே மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும், பவள கனிவாய் பெருமாளும் நேற்று மீனாட்சியம்மன் கோவிலில் எழுந்தருளினர்.

இதை தொடர்ந்து இன்று காலை திருக்கல்யாண மேடையில் பவளக்கனிவாய் பெருமாளும், சுப்பிரமணியசுவாமி  தெய்வானையுடனும் வந்திருந்து மணமேடையில் எழுந்தருளவுள்ளனர். தொடர்ந்து மீனாட்சியம்மனும் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும் மணக்கோலத்தில் தனித்தனி வாகனங்களில் மேடையில் எழுந்தருளவுள்ளனர்.

இதையடுத்து விநாயகர் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பாலிகை இடும் நிகழ்ச்சி  நடைபெற்று சுவாமி அம்பாள் சார்பில் பிரதிநிதிகளான சிவாச்சாரியார்களுக்கு ரக்சாபந்தன் எனப்படும் காப்புகட்டும் வைபவமும் அதனை தொடர்ந்து அபிஷேகம் நடைபெறவுள்ளது.

தொடர்ச்சியாக மீனாட்சியம்மன் சார்பிலும், சுந்தரேசுவரர் சார்பிலும் பிரதிநிதிகளாக இருந்து சிவாச்சாரியார்கள் மாலைமாற்றும் வைபவம் நடைபெற்றது. 

இதனையடுத்து சுவாமிக்கும் அம்மனுக்கும் பட்டு சாத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்று வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் வளர்க்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க திருமங்கலநாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக கோலகலமாக நடைபெற்றது. அப்போது கோவிலில் கூடியுள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோசம் முழங்க மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றவுடன் பெண்கள் தங்களது மாங்கல்யத்தை புதுப்பித்துகொள்வார்கள். 

இந்நிலையில் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு 3ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 1லட்சம் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்தும் நடைபெறவுள்ளது. இதேபோன்று நேற்று மாலை மாப்பிள்ளை அழைப்பு விருந்தும் நடைபெற்ற நிலையில்  இந்த விருந்தின்போது  சாப்பிட்ட கையோடு பக்தர்கள் திருக்கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மொய்ப்பந்தலில், திருக்கல்யாண மொய் எழுதி, பிரசாதம் பெற்றுக்கொள்வார்கள்.

மேலும், மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபத்தால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மதுரையில் உள்ள அனைவரும் தங்களது வீட்டு திருமணம் போன்று மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பார்த்து சாமி்தரிசனம் செய்து விருந்து உண்டு , மொய் எழுதும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com