விசிக தலைவருக்கு விக்ரமன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கமாறு கடிதம் எழுதிய இளம் வழக்கறிஞர்

விசிக தலைவருக்கு விக்ரமன் மீது  ஒழுங்கு நடவடிக்கை  எடுக்கமாறு  கடிதம் எழுதிய இளம் வழக்கறிஞர்
Published on
Updated on
2 min read

மதிப்பிற்குரிய தலைவர் திரு தொல் திருமாவளவன் அவர்களுக்கு, என் பெயர் கிருபா முனுசாமி. உச்ச நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்த நான் கடந்த 2020- ஆம் ஆண்டு ஒன்றிய அரசு சமூக நீதி அமைச்சகத்தின் National Overseas Scholarship-இன் மூலம் இலண்டனில் சட்டத் துறையில் முனைவர் பட்டப்படிப்பில் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.

நான் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து நீதிமன்றங்களிலும் பொதுத்தளங்களிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன் என்பது தாங்கள் உட்பட என்பது பலரும் அறிந்ததே! தங்கள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் அரசியல் நிகழ்ச்சிகளின் மூலமாக என்னுடன் நட்பாய் இருந்து நான் இலண்டனுக்கு சென்றபிறகு என்னை காதலிப்பதாக கூறினார். அவருக்கும் முற்போக்கு அரசியலில் பிடிப்பிருந்தது போல தோன்றியதால் நான் சம்மதித்தேன். நாங்கள் பழகி வந்த இந்த மூன்று ஆண்டுக்காலத்தில் என்னை பலமுறை வேசி என்றும் பிற ஆபாச வார்த்தைகளாலும் அவமானப்படுத்தியிருக்கார். ஒரு தலித்தாக இருப்பதினாலேயே எனக்கு அரசியல் ஆதாயம் கிடைப்பதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். ஒரு கணவன் மனைவியைப் போல குடும்பம் நடத்துவதாக என்னை உணர வைத்து பணம் செலவு செய்ய வைத்தார்

ஜாதி ரீதியாக தாக்குதல்

அதையும் மீறி அவருடைய கிரெடிட் கார்டில் ரூ.80,000/- ஏன் செலவு செய்தீர்கள் என்று கேட்டதற்கு, "நீயே போலி ஜாதி சான்றிதழ் கொடுத்து கவர்மன்ட்டை ஏமாற்றி ஸ்சோலர்ஷிப் வாங்கி ஓசி சோறு சாப்புட்ற" என்று கீழ்த்தரமாக பேசினார் அதுமட்டுமல்லாது. நான் விசிகவில் உள்ள தலித் ஆண்களை வைத்து அவருடைய தங்கையையும், 12 தாயையும் வன்புணர்வு செய்து விடுவேன் என்று குற்றம் சாட்டினார். இது போல செட்டியார் ஜாதியில் பிறந்த அவருடைய ஜாதிய சிறப்புரிமைகளை குறிப்பிடும் போதும், என்னை ஜாதிய ரீதியில் அவர் தாக்குவதை குறிப்பிடும் போதும், அவ்வளவு தான் உன் தலித் கார்ட தூக்கிட்டு வந்துட்டியா" என்று ஒரு தலித் பெண்ணாக என்னுடைய வாழ்வனுபவத்தை கொச்சைப்படுத்தியும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கிறார் என்னை மட்டுமல்லாது தங்களுடைய கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் குறித்தும் என்னிடம் அவதூறாக பேசியிருக்கிறார்.

12 லட்சம் பணம் பறிப்பு

இதுபோல கடந்த மூன்று ஆண்டுகளின் என்னை பலவிதமான குற்றவுணர்ச்சிகளுக்கு ஆளாக்கி ஜாதிய ஒடுக்குமுறையை குறித்தோ, ஒரு தனி மனிதராக என்னுடைய சுய மரியாதையை குறித்தோ பேசுவதே தவறு என்ற உணர்வு வரும் நிலைக்கு என்னை தள்ளினார். இவருடைய உளவியல் ரீதியான ஒடுக்குமுறையினால் தற்கொலை செய்துக்கொள்ளும் எண்ணத்திலேயே என்னை வைத்திருந்தார் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு மனநல நிபுணரிடன் சிகிச்சைப் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். என்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, ஜாதிய ரீதியில் அசிங்கமாக பேசி, இதுவரையிலும் 12 இலட்சத்திற்கு மேல் பணம் பறித்து, உளவியல் ரீதியாக என்னை சிதைத்து தற்கொலை செய்துக்கொள்ள தூண்டிய விக்ரமன் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவை அனைத்திற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது.

காவல்நிலையத்தில் புகார்

ஒரு உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஜாதிய-சட்ட வல்லுனரான, ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான செயற்பாட்டாளரான, அரசியல் ரீதியான இத்தனை தொடர்புகள் உள்ள தலித் பெண்ணாகிய என்னையே விசிகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் விக்ரமன் இவ்வளவு தைரியமாக இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாக்கியிருந்தால் இன்னும் சாதாரண பெண்களின் நிலையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

எனவே, அவர் மீது காவல்துறையில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளேன். வெளியில் முற்போக்குவாதியை போலவும், அரசியல் நேர்மையுடைவர் போலவும் நடந்துக்கொண்டு. தனிப்பட்ட முறையில் இத்தகைய அருவறுப்பான செயல்களை நிகழ்த்தும் விக்ரமன் மீது தாங்கள் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்காவிடில் அது தலித் மக்களின் பாதுகாப்பிற்காக நிற்கும் கட்சியின் அடிப்படையையே கேள்விக்குறியாக்கி விடும் என அந்த கடிதத்தில்  கிருபா முனுசாமி தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com