ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகையை திருடியவர் கைது...!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகையை திருடியவர் கைது...!!

நடிகர் ரஜினிகாந்தின் மகள் வீட்டில் 60சவரன் நகைகளை திருடிய பெண் பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.  நகைகளை பறிமுதல் செய்யும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.

சென்னை போயஸ் கார்டன் ராகவீரா அவென்யூ சாலையை சேர்ந்தவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்(41).  நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா 3, வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளார்.  கடந்த மாதம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் லாக்கரில் வைத்திருந்த 60 சவரன் தங்க மற்றும் வைர நகைகள் காணவில்லை என தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பிறகு லாக்கரில் வைத்திருந்த நகைகளை திறந்து பார்க்கவில்லை எனவும் சிஐடி நகர், போயஸ்கார்டன், செயிண்ட் மேரிஸ் சாலை என மூன்று வீடுகளில் லாக்கரில் மாறி மாறி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.  மேலும் வீட்டில் பணிபுரியும் ஈஸ்வரி உட்பட மூன்று பணியாளர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் வீடுகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பணியாற்றி வந்த ஈஸ்வரி என்பவரின் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் பணபரிவர்த்தனை நடந்துள்ளது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனையடுத்து மந்தைவெளி பகுதியை சேர்ந்த பணியாளர் ஈஸ்வரி(40) மற்றும் அவரது கணவர் அங்கமுத்து ஆகியோரை பிடித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  விசாரணையில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஈஸ்வரி சிறுக சிறுக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லாக்கரில் இருந்த நகைகளை திருடி வந்தது விசாரணையில் தெரியவந்தது.  

குறிப்பாக ஈஸ்வரிக்கு மூன்று மகள்கள் என்பதால் குடும்ப சூழ்நிலை காரணமாக நகையை திருட முடிவு செய்து  சிறுக சிறுக திருடி விற்பனை செய்து நிலம் வாங்கி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்வரி வங்கியில் கடன் வாங்கி சோழிங்கநல்லூரில் 95லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்கி இருப்பதும், கடனை 2 வருடங்களில் அடைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஈஸ்வரி வைத்திருந்த சிறிது நகைகளை போலீசார்   மீட்டுள்ளனர்.  மேலும் ஈஸ்வரி நகையை விற்றது எங்கே? நிலம்  வாங்கியது எப்படி? என விசாரணை நடத்தி திருடிய நகைகளை மீட்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க:   எஸ்பி மணிவண்ணன் மீது விசாரணை கைதி பகீர் குற்றச்சாட்டு....!!