சென்னை நகர விற்பனைக் குழு அமைக்க தேர்தல்...!!!

சென்னை நகர விற்பனைக் குழு அமைக்க தேர்தல்...!!!
Published on
Updated on
1 min read

சென்னை மாநகராட்சியில் நகர விற்பனைக் குழு அமைக்க தெருவோர வியாபாரிகளிலிருந்து ஆறு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் 15 மண்டலங்களிலும் நடைபெற்று வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் நகர விற்பனைக் குழு அமைக்க தெருவோர வியாபாரிகளிலிருந்து ஆறு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.  கடந்த தேர்தல் 2018 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் ஒரு மண்டலத்துக்கு ஆறு நபர்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணம் இருந்தது.  தற்போது உயர்நீதிமன்ற ஆணைப்படி மொத்தம் 15 மண்டலத்துக்கும் சேர்த்து ஆறு நபர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தலில் 16 பெண்கள் உள்பட 53 பேர் போட்டியிடுகிறார்கள்.  இதில் 11 பேர் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள்.  5 பேர் இதர பிற்பட்ட வகுப்பினர்.  11 பேர் சிறுபான்மை இனத்தவர்.  6 பேர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் 12 பேர் பொதுப் பிரிவை சேர்ந்தவர்கள்.

15 மண்டலங்களில் இத்தேர்தல் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.  இந்த தேர்தலில் 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  ஒரு வாக்குச்சாவடி மையத்தில் ஒருவருக்கு ஆறு வாக்கு சீட்டு அளிப்பார்கள் அவர்கள் ஆறு வாக்குச் சீட்டிலும் வாக்களித்து வாக்கு பெட்டியில் போடுவார்கள்.

மொத்தம் மாநகராட்சி கணக்குப்படி 38,588 நபர்கள் வாக்கு செலுத்த தகுதியானவர்களாக இருக்கின்றனர்.  இதில் கிட்டத்தட்ட 28 ஆயிரம் நபர்களுக்கு வாக்களிக்க அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.  அடையாள அட்டை வழங்கப்படாதவர்களுக்கு ஆதார் அட்டை உள்ளிட்ட ஐந்து அடையாள அட்டை எடுத்து வந்து வாக்கு செலுத்தலாம். 

வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் வேட்பாளர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு செனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்திற்கு கொண்டு செல்வார்கள்.  நாளை வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு நாளை மாலை அல்லது இரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்படும்.  இந்த தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வியாபாரிகளின் கோரிக்கை பிரச்சனைகளை மாநகராட்சி கவனத்திற்கு கொண்டு செல்வார்கள்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com