கல்லணையில் தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை!!

குறுவை நெற்பயிரைக் காப்பாற்ற கல்லணைக் கால்வாயில் முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தஞ்சை மாவடத்தில் வரலாறு காணாத வகையில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 96 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைப்பெற்று உள்ளது. அதே சமயம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் டெல்டா மாவட்டங்கள் பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்தது காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் முறை வைத்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால், கல்லணை கால்வாய் பாசனத்திற்கு உட்பட்ட கக்கரைக்கோட்டை, வடக்கி கோட்டை, சோழபுரம், கருக்காடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் மணிகள் வரக்கூடிய பருவத்தில் தண்ணீர் இல்லாமல் வேர்கள் காய்ந்து கருகி போய்விட்டன.

மேலும், நெல்மணிகள் பதராகி வருவதாகவும், ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் செலவு செய்து உள்ள நிலையில், காய்ந்து வரும்  பயிர்களை காப்பாற்ற 30 நாட்களுக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் விவசாயிகள். 

மேலும், சம்பா பணிகள் தடையில்லாமல் தொடர தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை கர்நாடக அரசிடம் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இதையும் படிக்க || மீலாது நபியை முன்னிட்டு வைகோ வாழ்த்து!!