"எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றமே ஒடிசா ரயில் விபத்துக்குக் காரணம்" ரயில்வே துறை அமைச்சர் தகவல்!

"எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றமே ஒடிசா ரயில் விபத்துக்குக் காரணம்" ரயில்வே துறை அமைச்சர் தகவல்!
Published on
Updated on
1 min read

எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றமே ஒடிசா ரயில் விபத்துக்குக் காரணம் என மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பஹானாகா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்ததில் பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்று கொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயிலும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 போ் உயிாிழந்த நிலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனா்.

இதனையடுத்து நேற்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் என முக்கிய தலைவர்கள் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில், இரண்டாவது நாளாக தீவிர ஆய்வில் ஈடுபட்ட மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கவாச் என்ற எச்சரிக்கை அமைப்பு இல்லாததே விபத்திற்கு காரணம் என்ற குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றமே விபத்து ஏற்பட்டதற்கு காரணம் என்று கூறிய அவர், வரும் 7ஆம் தேதி முதல் பாலசோரில் ரயில் சேவை தொடங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போதைய நிலவரம் தொடர்பாக அஸ்வினி வைஷ்ணவிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com