
கோவை மாநகராட்சிக்கு மேலும் 176 குப்பை தொட்டிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து கொட்டுமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 20 வார்டுகளுக்குட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கினார்.
கோவை மாநகராட்சியில் நாள்தோறும் குப்பைகளை தரம் பிரித்து எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறிருக்க, பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டும் பொழுது அவற்றை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து தனித்தனியே கொட்டுமாறு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பைகளை எடுப்பதற்கு தட்டுப்பாடு நிலவுவதாக புகார்கள் எழுந்ததையடுத்து, கோவை மாநகராட்சிக்கு மேலும் புதிய 176 குப்பை தொட்டிகளுடன் கூடிய 44 தள்ளுவண்டிகளை மத்திய மண்டலத்தின் 20 வார்டுகளுக்குட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கினார். இவற்றிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, பொது சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வன் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.