கவர் ஸ்டோரி

ஆதார் தரவுகள் தவறாக பயன்படுத்தப்படுகிறதா?... பாதுகாப்பை வலுப்படுத்துவது எப்படி?

Malaimurasu Seithigal TV

மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஆதார் ஆவணமும் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. முக்கிய ஆவணங்களில் ஒன்றான ஆதார் இல்லாவிட்டால், எந்த ஒரு அரசாங்க திட்டங்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகிவிடும். அனைத்து செயல்பாடுகளுக்கும் ஆதார் என்கிற ஒற்றை ஆவணம் போதுமானதாக இருந்தாலும், அந்த ஒற்றை ஆவணத்தை வைத்து நிறைய மோசடிகளும் நடந்து வருகின்றது.

எடுத்துக்காட்டாக தெருவோரம் உள்ள ஒரு கடையில் சிம் கார்டு வாங்குவதற்கு ஆதார் தேவைப்படும் பொழுது அதனை கடைக்காரரிடம் கொடுப்பது உண்டு. ஆனால், அதனை சிலர் மோசடி செய்வதற்காக பயன்படுவதுமுண்டு. இது போன்ற பல சந்தர்ப்பங்களில் ஆதார் தவறுத்தலாக பயன்படுத்தக்கூடும். 

ஆனால், இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க, ஆதார் அடையாள அட்டைகளை வழங்கும் யுடிஏஐ நிறுவனம், சில பாதுகாப்பு அம்சங்களையும் வழங்கியுள்ளது. அதாவது, யுடிஏஐ-ன் அதிகாரப்பூர்வமான தளத்தில், ஆதார் எண் மற்றும் பயோ மெட்ரிக்ஸ் (கண் கருவிழி, கை ரேகைகள்) போன்றவற்றை லாக் செய்துகொள்ள முடியும்.

ஆதார் பயோ மெட்ரிக்ஸை லாக் செய்வதன் மூலம், நமது பாதுகாப்பை வலுப்படுத்த முடியும். ஒருமுறை, பயனர் அதனை லாக் செய்துவிட்டால், நமது கை ரேகைகளை எங்குமே பயன் படுத்த முடியாது. அரசு சார்ந்த விஷயங்களுக்காக உபயோகப்படுத்த நினைத்தால் கூட, மீண்டும் அதே தளத்தினுள் சென்று, பயோ மெட்ரிக்ஸ் லாக்கை, அன்-லாக் செய்ய வேண்டும். இத்தகைய அம்சத்தால், நமது ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்க்கலாம்.

இதே போல், மற்றொரு அம்சம் தான், ஆதார் லாக். இதனை லாக் செய்வதன் மூலம், நமது ஆதார் எண்-ஐ யாராலும் உபயோகப்படுத்த முடியாது. நாம் நினைத்தால் கூட பயன்படுத்த முடியாது. எப்பொழுதெல்லாம் நமது ஆதார் எண்னை பயன்படுத்துகிறோமோ, அப்பொழுதெல்லாம் யுடிஏஐ-ன் அதிகாரப்பூர்வமான தளத்தினுள் சென்று அன்-லாக் செய்ய வேண்டும். இது சற்றே சிரமமான செயலாக இருந்தாலும், பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் அம்சமாகும்.

பயோ மெட்ரிக் லாக் & ஆதார் லாக் - செயல்முறை

1) யுடிஏஐ-ன் அதிகாரப்பூர்வமான தளம் அல்லது mAadhaar செயலியினுள் செல்ல வேண்டும்.
2) நமது ஆதார் எண்னை உள்ளிட்டு, OTPயை பதிவு செய்ய வேண்டும்.
3) அந்த பக்கத்தில், பட்டியலிடப்பட்டிற்கும் அம்சங்களுள் பயோ மெட்ரிக் லாக் அம்சமும் இடம் பெற்றிருக்கும். 
    அதை க்ளிக் செய்தால் அடுத்த பக்கத்தில் இரண்டு ஆப்சன்கள் இடம்பெற்றிருக்கும். 
4) பயோ மெட்ரிக்ஸை லாக் செய்யவும், அன்-லாக் செய்யவும் இரண்டு வசதிகள் இருக்கும். தேவைப்படும் 
    பொழுது, லாக் செய்து விட்டு, தேவைப்படும் பொழுது அன்-லாக் செய்துக்கொள்ள வேண்டும்.
5) ஆதாரை லாக் செய்வதற்கு, இதே செயல்முறையை பின்பற்ற வேண்டும்.