உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா திருவிழாவுக்கு அடுத்தபடியாக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் நடைபெறும் தசரா திருவிழா, தென்னிந்தியாவின் புகழ்பெற்ற ஆன்மிகத் திருவிழாக்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்தத் திருவிழா, அம்மன் வழிபாடு, கடுமையான விரதம், வேடமிட்டு ஆடுதல் எனப் பல்வேறு தனித்துவமான ஆன்மிக மரபுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக, குலசை தசராவின் அடையாளமாகத் திகழ்வது பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடும் மரபுதான்.
காளி, சிவன், முருகன், விநாயகர், அனுமன் உள்ளிட்ட தெய்வங்களின் வேடங்கள் மட்டுமின்றி, காவலர், அரசர், குறவன், குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடங்களையும் பக்தர்கள் அணிகின்றனர். இதற்காகப் பலர் விரதம் இருந்து, மாலை அணிந்து, தங்களது உடல் மற்றும் மனதை வழிபாட்டுக்குத் தயார்படுத்துகின்றனர். இவ்வாறு வேடமணிவதை வெறும் அலங்காரமாகப் பார்க்காமல், அம்மனுக்குச் செலுத்தும் நேர்த்திக்கடனாகவும் பக்தியின் வெளிப்பாடாகவும் கருதுகின்றனர். இதன் மூலம் சமூகங்ககளிடையே வேறுபாடின்றி அம்மன் அனைவரும் சமம் என்பதை உணர்த்துவதாகவும் ஒரு கருத்து உள்ளூர் மக்களிடையே உள்ளது.
குலசை தசராவில் வேடமணிவதற்காகப் பல பக்தர்கள் திருவிழாவுக்கு முன்பே விரதத்தைத் தொடங்குகின்றனர். விரதக் காலத்தில் உணவுக் கட்டுப்பாடுகள், இறை வழிபாடு, ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றனர். பின்னர், திருவிழாவின் முக்கிய நாள்களில் தாங்கள் நேர்த்திக்கடனாக ஏற்றுக்கொண்ட வேடங்களை அணிந்து ஊர் மக்களிடம் காணிக்கை பெற்று அம்மனைத் தரிசிக்கின்றனர். இந்த வேடமிட்டு ஆடும் மரபு, தனிநபரின் பக்தியை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், குடும்பங்கள் மற்றும் குழுக்களாக இணைந்து வழிபடும் சமூக மரபாகவும் விளங்குகிறது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் இதில் பங்கேற்பதால், குலசேகரன்பட்டினம் முழுவதும் திருவிழாக் காலத்தில் பக்தி நிறைந்த சூழல் நிலவுகிறது. இவ்வாறு, மைசூரு தசரா அதன் பிரம்மாண்டமான ஊர்வலங்கள் மற்றும் அரச மரபுக்காகப் புகழ்பெற்றிருப்பதைப் போல, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா விரதம், நேர்த்திக்கடன், பல்வேறு வேடங்கள் மற்றும் வேடமிட்டு ஆடும் தனித்துவமான பக்தி மரபுக்காக உலகம் முழுவதும் உள்ள பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆனால் தற்போது இந்த திருவிழாவில் பல சின்னத்திரை நடிகை நடிகைகள் சினிமா பாடல்களுக்கு நடனமாடுவது விரதமிருந்து வரும் பகதர்கள் மற்றும் ஊர் மக்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
80 காலகட்டங்களில் தனித்தனியாக விரதமிருந்து வேடமிட்டு வரும் பக்தர்கள் குழுக்களாக இணைந்து ஒன்றாக வேடம்மிட்டு ஆடுவதை, நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதையும் செய்து வந்திருக்கின்றனர். அந்த காலகட்டத்தில் காணிக்கை செலுத்த குழுக்கள் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதை தொடங்கியதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு கலை நிகழ்ச்சிகள் மூலம் வசூலிக்கப்படும் பணத்தை கோவிலுக்கு காணிக்கை செலுத்து வந்திருக்கின்றனர். நாளடைவில் கோவிலுக்கு விரதமிருந்து வரும் பக்தர்களின் தசரா குழுக்கள் அதிகரித்த நிலையில் ஒவ்வொரு குழுக்களும் போட்டி போட்டுகொண்டு கலை நிகழ்ச்சிகளை தங்கள் தசரா குழுக்களில் நடத்த தொடங்கியிருக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இதுபோல தசரா குழுக்களும் அவர்கள் நடத்தும் கலை நிகழ்ச்சிகளும் அதிகரித்து வந்த நிலையில் 1990 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தசரா குழுக்கள் பாராம்பரிய நையாண்டி நாதஸ்வர மேளத்துடன் கரக கலைஞர் நடனமும் தசரா குழுக்களில் இடம்பெற்று வந்தது. இந்நிலையில் தங்களது தசரா குழுக்கள் தான் மற்றவற்றை குழுக்களை விட பெரியது என்பதை காட்ட வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையில், சில தசரா குழுக்கள் சென்னை பெங்களூர் பம்பாய் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வியாபார ரீதியாக சென்று சினிமா கலைஞர்களை தசரா விழாக்களின் போது அழைத்து வந்தனர்.
இந்த செயல்கள் ஆரம்ப காலகட்டத்தில் அனைவராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டாலும், நாளடைவில் பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கையாக செலுத்திய பணம் நாளடைவில் பாடல்களுக்கு ஆட கூடிய சினிமா கலைஞர்களுக்கு சென்றது. பல ஆண்டுகளாக பாராம்பரியத்துடன் விரதம் இருந்து, பல்வேறு வேடங்களுடன் வேண்டுதல்களை, நிறைவேற்ற வரும் பக்தர்களுக்கும் சினிமா கலைஞர்களையும் அவர்களது ஆட்டத்தையும் பார்க்க வரும் கூட்டம் இடையூறு ஏற்படுத்தியது. மேலும் சில ஆபாச நடனங்களும் ஆடப்பட்டதாக கூறுகின்றனர். இதனை கவனித்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யக்கூடிய பிரபல வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் கடந்த 2017 ஆம் ஆண்டு தசரா திருவிழாவில் ஆபாச நடனங்கள் மற்றும் சினிமா கலைஞர்களை தடை செய்ய வேண்டும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த கேகே சசிதரன் மற்றும் ஜி. ஆர் சுவாமிநாதன் ஆகிய நீதிபதி கொண்ட நீதிமன்றம் அமர்வு தசரா திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடந்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீர்ப்பை வழங்கியது. இருப்பினும் இந்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்படாததால் மீண்டும் 2021 ஆம் ஆண்டு ராம்குமார் ஆதித்தன் இந்த வழக்கை மறுபரிசீலனை செய்ய மனு அளித்த நிலையில் அந்த மனுவை விசாரித்த அப்போதைய நீதிபதி தசரா திருவிழாவில் மட்டுமல்லாமல் மற்ற கோவில் திருவிழாக்களிலும், டிஸ்கொ நடனங்கள் மற்றும் இரட்டை அர்த்தம் தரும் பாடல்களுக்கு நடனமாட கூடாது என தீர்ப்பு விதித்தது. அதன் பின்னர் தசரா குழுக்கள் இந்த விதியை பின்பற்றாத நிலையில் 2025 ஆம் ஆண்டு இந்த மனுவை மீண்டும் விசாரித்த நீதிமன்றம், கட்டுப்பாடுகளை பின்பற்றாத கோவில் நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
கடந்த சில வருடங்களாவே தசரா குழுக்கள் சின்னத்திரை மற்றும் துணை நடிகர் மற்றும் நடிகர்களை அழைத்து வந்து தங்கள் குழுக்கள் சார்பாக கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு தசரா திருவிழா தொடங்குவதற்கு முன்பாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சினிமா பிரபலங்களை அழைத்து வந்து கலை நிகழ்ச்சிகளை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் அவ்வாறு அழைத்து வரும் தசரா குழுக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் தற்போது தசரா திருவிழா நடந்து முடிந்த நிலையில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக தடையை மீறி பல தசரா குழுக்கள் இம்முறையும் சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளை அழைத்து வந்து சினிமா பாடல்களுக்கு நடனமாட வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்த முறை திருவிழாவில் மூன்று நான்கு நாட்களாக தசரா குழுக்கள் சின்னத்திரை நடிகர்கள் மற்றும் இன்ஸ்டா பிரபலங்களை முன்பதிவு செய்து தங்கள் தசரா குழுக்கள் ஊர்வலம் செல்லும் வீதிகளில் தொடர்ந்து சினிமா பாடல்களுக்கு நடனமாட வைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் தடை மீறியுள்ள நிலையில் தற்போது வரை எந்த தசரா குழுக்கள் மீதும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து ராம்குமார் ஆதித்தன் நாளை காவல்துறையிடம் அதிகாரபூர்வமாக புகாரளிக்க உள்ளதாக நமது மாலை முரசு செய்தியாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தசரா குழுக்களில் நடிகர்கள் மற்றும் இன்ஸ்டா பிரபலங்கள் சினிமா பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.