கடலூர்,கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஆர் எஸ் எஸ் பேரணி இன்று மாலை நடைபெற இருந்த நிலையில், கடலூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அனுமதி வழங்கிய நீதிமன்றம்:
கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தது. தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தலாம் எனவும், காவல்துறை அனுமதி வழங்கவேண்டும் எனவும் உத்தரவிட்டது.
ஆனால், காவல்துறை தரப்பில் சட்ட ஒழுங்கு பிரச்னைகளை காரணம் காட்டி, ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நவம்பர் 6 ஆம் தேதி தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய அனுமதிப்பட்ட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்தலாம் என்றும், அந்த ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு ஆர்.எஸ்.எஸ் தான் பொறுபேற்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளுடன் உத்தரவிட்டது.
பேரணியை ஒத்திவைத்த ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு:
இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறுவதாக இருந்த பேரணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிவித்தது. மேலும், உயர்நீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதால் தான் பேரணியை ஒத்தி வைப்பதாகவும், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட இணையப்பக்கங்களில் இதுகுறித்து யாரும் விமர்சிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று மாலை நடைபெறும் பேரணி :
இந்நிலையில் காவல்துறை அனுமதி வழங்கி முன்பு அறிவித்த கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் ஆர் எஸ் எஸ் பேரணி இன்று மாலை நடைபெறுவதாக தகவல் வெளியாகியானது. இதனால் அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றும், இன்று காலையும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து, பேரணி மற்றும் ஊர்வலம் நடைபெறும் இடங்களை காவல்துறையினர் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதன்படி, கடலூரில் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெரு, தேரடி தெரு, மற்றும் வரதராஜ கோவில் பெருமாள் வீதி ஆகிய இடங்களில் 2000 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால், கடலூர் முழுவதும் காக்கிமயமாக காணப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ்.பேரணி தொடங்கியது:
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அறிவித்ததை போலவே கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கியது. அந்த வகையில், காலை முதலே காக்கிமயமான கடலூரில் 2000க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தேரடி தெரு, சன்னதி தெரு, நான்கு மாட வீதிகள் வழியாக தொடங்கிய ஆர்.எஸ்.எஸ் பேரணி நிறைவடைந்தவுடன், பொதுக்கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகவே, பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.