க்ரைம்

ஒரே நாளில் 10 கொலைகள்.. தீபாவளியில் அடுத்தடுத்து அரங்கேறிய  வெறிச்செயல்! போலீஸ் முதல் இளைஞர்கள் வரை.. நடந்தது என்ன?

பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்களைத் தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் இளைஞர்களால் தாக்கப்பட்டு..

Muthu Lakshmi

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையான நேற்று (நவம்பர் 8) பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம், பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட சண்டை, ரவுடி கொலை எனப் பல்வேறு காரணங்களால் ஒரே நாளில் 10 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர், ஐடி ஊழியர், இரண்டு சிறுவர்கள், இளம் பெண் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு இடங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம்; தீபாவளியில் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த இளைஞர்களைத் தட்டிக்கேட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார் (56), இளைஞர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த செந்தில்குமார், பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் பட்டாசு வெடித்த இளைஞர்களை கண்டித்துள்ளார். மேலும் அவர்களை வீடியோ எடுக்க முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் முழங்கையால் தாக்கியதில் அவர் கீழே விழுந்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்துள்ளார். இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டம்; சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் சேர்ந்த ராகுல் (17), விஷால் (17) ஆகிய இரண்டு சிறுவர்கள் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யபப்ட்டுள்ளனர். தீபாவளி (நேற்று) இரவு 11.30 மணியளவில் சுங்கச்சாவடி அருகே உள்ள புள்ளம்பாடி வாய்க்கால் கரையோரம் சென்றுகொண்டிருந்தபோது இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இதில் விஷால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ராகுலும் உயிரிழந்தார். இக்கொலை  பழிவாங்கும் நோக்கில் நடந்ததா? என்ற கோணத்தில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம்;  புறத்தாக்குடியில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சென்னையில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த கிறிஸ்டோபர் (20) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். தீபாவளிக்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்த கிறிஸ்டோபர், தனது நண்பர்களுடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த டொனால்ட் என்பவர் இரும்பு ஸ்பேனரால் கிறிஸ்டோபரின் நெஞ்சில் குத்தியுள்ளார். படுகாயமடைந்த கிறிஸ்டோபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தலைமறைவான மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை; வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் முன்விரோதம் காரணமாக தனுஷ் (19) என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட தனுஷின் அண்ணன் சிலம்பரசனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அப்புகுட்டி தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் தனுஷ் தலையிட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட மோதலில் அப்புகுட்டி, அவரது தந்தை உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல் தனுஷைச் சரமாரியாக வெட்டியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை செய்துவிட்டு தலைமறைவான போலீசார் தேடி வருகின்றனர்.

சிவகங்கை; கல்லல் அருகே பொரட்டி பகுதியில் பிரபல ரவுடி நவீன் (25) மர்ம கும்பலால் விரட்டி விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களைப் பார்க்கச் சென்றபோது, பழிக்குப் பழியாக கொலை நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர்; மாவட்டத்தில் ரவுடி பிரிதிவிராஜ், மானாமதுரையில் ரவுடி விக்னேஷ், திருவள்ளூரில் இளம் பெண் மேகலா தனது கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பெரம்பலூர் அருகே நொச்சியம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் ரவி (50) என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு தீபாவளி பண்டிகை நாளில் தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து நிகழ்ந்த கொலைச் சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன. பல்வேறு சம்பவங்களில் முன்விரோதம், தனிப்பட்ட தகராறு உள்ளிட்ட காரணங்கள் விசாரணையில் இருந்து வரும் நிலையில், கொலையாளிகளைக் கண்டறிய அந்தந்தப் பகுதி போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.