உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கன்னோஜ் மாவட்டம் ஜகத்பூர் கிராமத்தில் ஏற்பட்ட ஒரு தகராறைத் தொடர்ந்து, 30 வயதுப் பெண் ஒருவர் தனது கணவரால் நாற்காலியில் கட்டிப்போடப்பட்டு, பெட்ரோல் ஊற்றித் தீ வைக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிக்கந்தர்பூர் காவல் புறக்காவல் நிலையப் பகுதியில் உள்ள வீட்டிற்கு காவல்துறையினர் சென்றடைந்தபோது, சோனமின் உடல் கடுமையாக எரிந்திருந்ததாக காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், உயர்மட்ட சட்ட நடவடிக்கைகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனம் 11 ஆண்டுகளுக்கு முன்பு 35 வயதான சுக்பீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சோனம் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணத்திற்கு மீறிய உறவை வளர்த்துக் கொண்டதாகவும், அவருடன் வாழ்வதற்காகத் தன் கணவரை விட்டுப் பிரிய விரும்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, சிகந்தர்பூர் காவல் புறக்காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் கலந்துகொண்ட பஞ்சாயத்து ஒன்றும் நடைபெற்றுள்ளது.
பல மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சோனம் அவரது கள்ளக்காதல் உறவை முறித்துக்கொண்டு தன் கணவருடன் வாழ்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். சோனமுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்த அந்த நபர் பஞ்சாயத்து நடந்த அன்று மாலையே விஷப் பொருள் ஒன்றை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் சேர்த்துள்ளனர். இதனையடுத்து அவர், சிகிச்சை பெற்ற பின்னர் உயிர் பிழைத்துள்ளார். மறுநாள் சோனமிற்கும் அவரது கணவருக்கும் இடையே மற்றொரு தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சுக்பீர் சோனமை ஒரு நாற்காலியில் கட்டிப்போட்டு, அவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் வருவதற்குள் சுக்பீர் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இருப்பினும், சுக்பீர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்