க்ரைம்

“காட்டுப்பகுதிக்குள் கடத்தி சீரழிக்கப்பட்ட.. 12 வயது சிறுமி” - போலீசுக்கு டிமிக்கி கொடுத்தவருக்கு.. கால் முறிவு!

"சிறுமியைப் பின்தொடர்ந்த மர்ம நபர் ஒருவர், திடீரென சிறுமியின் வாயைப்பொத்தி காட்டுப்பகுதிக்குள்..."

Muthu Lakshmi

திருப்பூர் வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட குறவன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், நேற்று இரவு 9 மணியளவில் அப்பகுதியில் உள்ள காட்டு வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது சிறுமியைப் பின்தொடர்ந்த மர்ம நபர் ஒருவர், திடீரென சிறுமியின் வாயைப்பொத்தி காட்டுப்பகுதிக்குள் கடத்தி சென்றுள்ளார். மேலும் அந்த சிறுமியை மயக்கமடையச் செய்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து மயக்கத்தில் இருந்து எழுந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை உணர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அங்கிருந்து உடனடியாக வீட்டிற்குச் சென்ற சிறுமி, நடந்த விவரங்களை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக வீரபாண்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமி அளித்த தகவலின் அடிப்படையில், சிறுமியைப் பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது அதே பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (வயது 26) என்பது தெரியவந்தது. இவர் அம்மிக்கல் விற்பனை  செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி, 4 வயதல் ஒரு குழந்தையும் மற்றும் 7 மாத குழந்தை என இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து காட்டுப்பகுதியில் தலைமறைவாக இருந்த விஷ்ணுவை பிடிக்க நல்லூர் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் ராஜேஷ்வரி, கவிதா, உதவி ஆய்வாளர் வேல்பாண்டி உள்ளிட்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இன்று காலை அய்யம்பாளையம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த விஷ்ணுவை கைது செய்ய முயன்ற போது அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அப்போது காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் துரத்திச் சென்றபோது கீழே விழுந்ததில் அவரது இடது கால் உடைந்துள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட விஷ்ணுவை மருத்துவ சோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் திருப்பூர் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.