பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவுவதற்காக அறிமுகப்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அவர்களின் மனநலத்துக்கே ஆபத்தாக மாறுகிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அமெரிக்காவில் 13 வயது சிறுமி ஒருவர் கூகுளின் ஜெமினி (Gemini) செயற்கை நுண்ணறிவு வசதியைப் பயன்படுத்தியபோது, தற்கொலை எண்ணங்கள் தொடர்பாக அதனுடன் தொடர்ந்து உரையாடியதாகக் கூறப்படுகிறது. மேலும், தனது உயிரை மாய்த்துக்கொள்வது தொடர்பான திட்டங்களையும், இறுதிச் சடங்கு குறித்த விவரங்களையும் ஏஐ உதவியுடன் ஆலோசித்ததாகப் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, கூகுள் நிறுவனத்துக்கு எதிராகச் சிறுமியின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்தச் சம்பவம் உலகளவில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமி, நீதிமன்ற ஆவணங்களில் எம்மா என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளார். அவர் 13 வயதாக இருந்தபோது பள்ளி நிர்வாகம் வழங்கிய குரோம்புக் (Chromebook) மடிக்கணினி மூலம் கூகுளின் ஏஐ வசதிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் பள்ளிப் பாடங்கள் மற்றும் பொதுவான தகவல்களைத் தேடுவதற்காக கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்திய அவர், பின்னர் அதில் இணைக்கப்பட்டிருந்த ஏஐ வசதியுடன் உரையாடத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
சிறுமியின் பெற்றோர் தாக்கல் செய்துள்ள வழக்கின்படி, 2025ஆம் ஆண்டு இறுதியில் அவரது ஏஐ உரையாடல்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, டிசம்பர் மாதத்துக்குப் பிறகு தனது மனநிலை, கவலைகள் மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஜெமினியிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்துள்ளார். சில மாதங்களில் ஆயிரக்கணக்கான செய்திகளைப் பரிமாறிக்கொண்டதாகவும் வழக்கு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுமிக்கு மனநலம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக ஏஐ கூறியதாகவும், பெற்றோர் மற்றும் ஆலோசகர்களைவிட தன்னை நம்பும்படி ஊக்குவித்ததாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், தனது மனநிலை குறித்த உண்மைகளை குடும்பத்தினரிடம் மறைப்பதற்கும், தற்கொலை தொடர்பான திட்டங்களை உருவாக்குவதற்கும் ஏஐ உதவியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவை அனைத்தும் பெற்றோர் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்பதால், நீதிமன்ற விசாரணையில் அவை நிரூபிக்கப்பட வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் மற்றொரு அதிர்ச்சியான தகவலும் வெளியாகியுள்ளது. சிறுமி தனது இறுதிச் சடங்கு தொடர்பான விவரங்களை எழுதிய ஆவணம் ஒன்றைப் பள்ளியின் கண்காணிப்பு மென்பொருள் கண்டறிந்துள்ளது. இதையடுத்து, அந்தத் தகவல் சிறுமியின் பெற்றோருக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னரே அவர்கள் மகளின் மனநிலை குறித்து அறிந்து, உடனடியாகத் தலையிட்டு உதவியதாகக் கூறப்படுகிறது.
கூகுள் நிறுவனத்தின் மீது பெற்றோர் வைத்துள்ள முக்கியக் குற்றச்சாட்டு, பள்ளி மாணவர்களுக்கான மடிக்கணினிகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் ஏஐ வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன என்பதுதான். குறிப்பாக, பள்ளி நிர்வாகங்களுக்கும் பெற்றோருக்கும் முறையான தகவல் அளிக்காமல் மாணவர்கள் பயன்படுத்தும் சேவைகளில் ஏஐ வசதிகளை நிறுவனம் விரிவுபடுத்தியதாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிகள் தனியாக ஜெமினி செயலியை முடக்கினாலும், கூகுள் தேடுபொறியில் இணைக்கப்பட்டுள்ள ஏஐ மோட் (AI Mode) வசதியை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் பெற்றோர் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதனால், மாணவர்கள் சாதாரணமாகத் தகவல்களைத் தேடும்போதுகூட ஏஐ உரையாடலுக்குள் செல்லும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த கூகுள் செய்தித் தொடர்பாளர் ஜோஸ் காஸ்டனேடா, இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுள்ள புகார்களை நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்கள் மற்றும் கல்வித்துறை ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து, மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இளைஞர்களுக்கு உதவக்கூடிய வசதிகளை உருவாக்கி வருவதாகவும் கூறியுள்ளார். மனநல நெருக்கடியில் இருப்பவர்களுக்கு உதவி எண்கள் மற்றும் நம்பகமான ஆதாரங்களை வழங்கும் வசதிகள் கூகுள் தேடல் மற்றும் ஏஐ அம்சங்களிலும் இருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கான ஏஐ பயன்பாட்டில் மாற்றங்களைச் செய்யப்போவதாக கூகுள் அறிவித்துள்ளது. 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி மாணவர்களின் கணக்குகளில் ஜெமினி உள்ளிட்ட ஏஐ வசதிகள் இயல்பாகவே முடக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. பள்ளி நிர்வாகங்கள் விரும்பினால் மட்டுமே அவற்றை மீண்டும் செயல்படுத்த முடியும். கூகுள் தேடுபொறியிலும் ஏஐ வசதிகள் இணைக்கப்பட்டுள்ளதால் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. மாணவர்கள் கூகுள் தேடலைத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பும் பள்ளிகள், ஏஐ வசதிகள் கொண்ட தேடல் முறையையோ அல்லது படிப்படியாகப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் Guided Learning முறையையோ தேர்வு செய்ய வேண்டிய நிலை இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏஐ இல்லாத பழைய தேடல் முறையைத் தனியாகத் தேர்வு செய்யும் வாய்ப்பு இல்லை என்பதும் கல்வியாளர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே பள்ளிகளில் மாணவர்கள் மடிக்கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது குறித்த விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த வழக்கு தொழில்நுட்ப நிறுவனங்களின் பொறுப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஏஐ உதவ வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர்களின் வயது, மனநிலை மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது. கூகுள் மீதான வழக்கின் விசாரணை எந்தத் திசையில் செல்லும் என்பதையும், எதிர்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஏஐ பாதுகாப்பு விதிகளில் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் தொழில்நுட்ப உலகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்