செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன், கடந்த (மார்ச் 9) ஆம் தேதி அன்று நள்ளிரவில் 14 மற்றும் 16 வயதுடைய இரு சிறுமிகளை தனது இருசக்கர வாகனத்தில் மதுராந்தகம் அருகே உள்ள கீழக்கண்டை பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவர்கள் தேவத்தூர் வழியாகச் சென்றபோது, மதுபோதையில் இருந்த மர்ம நபர்கள் இருவர் சிறுவனின் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றிருக்கின்றனர். தன்னை இருவர் பின் தொடர்வதை பார்த்து பயந்துபோன சிறுவன், இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியபோது, அத்திவாக்கம் பகுதியில் வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.
அப்போது அந்த இரண்டு மர்ம நபர்கள் சிறுவனை கடுமையாக தாக்கிய நிலையில் 17 வயது சிறுவன் தன்னுடன் வந்த 14-வயது சிறுமியை விட்டு விட்டு பயத்திலும் அவசரத்திலும் 16 வயது சிறுமியை மட்டும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்ட இரு மர்ம நபர்கள் காயமடைந்த 14 வயது சிறுமியை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த அத்திவாக்கம் ஏரிப் பகுதிக்குச் சென்று, அங்கு சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இரவு முழுவதும் அங்கே பாலியல் சித்திரவதைக்கு உள்ளான சிறுமியை அதிகாலையில் பார்த்த அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே அந்த சிறுமியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
அங்கு தன்னை பரிசோதித்த மருத்துவரிடம் சிறுமி நடந்த விவரங்களைக் கூறியதையடுத்து, மருத்துவர்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில் சம்பவம் நடந்த நேரத்தில் அத்திவாக்கம் ஏரி பகுதியில் செயல்பாட்டில் இருந்த செல்போன் எண்கள் கண்டறியப்பட்டும், சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் போலீசார் ஆவடி அருகே பதுங்கி இருந்த கூடுவாஞ்சேரி காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான பாலாஜி என்கிற காக்கா பாலாஜியை நேற்று கைது செய்தனர்.
இவன் மீது கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகளும், உள்ள நிலையில் 'ஏ' கேட்டகிரி ரவுடியாக கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் வலம் வந்துள்ளார். மேலும் பாலாஜி கடந்த ஜனவரி மாதத்தில் கூடுவாஞ்சேரி மதுபான கடை ஒன்றில் மது அருந்த வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த பாலாஜி 14 வயது சிறுமியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை அளித்த நிலையில் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் பாலாஜி அளித்த தகவலின் அடிப்படையில் தன்னுடன் 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் மாரிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த தாமோதர பெருமாள் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.