கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டையூர் கொல்லை மலை கிராமத்தை சேர்ந்தவர் மத்தூரப்பா (23). கூலி வேலை பார்த்து வரும் இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் காதல் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் தளி அருகே உள்ள உளிபெண்டா பகுதியில் வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த 15 வயது சிறுமி கற்பமாகியுள்ளார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த மத்தூரப்பாவின் மனைவிக்கு (சிறுமி) கடந்த மாதம் 28 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். அந்த சிறுமியை உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார் கணவர் மத்தூரப்பா. அப்போது மருத்துவர்கள் விசாரணையில் அவருக்கு குழந்தை திருமணம் நடந்ததும், இரண்டு கிட்னியும் செயலிழந்ததும் தெரியவந்துள்ளது. இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்த மத்தூரப்பாவின் மனைவியை மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் கடந்த 30 ஆம் தேதி அவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மூன்று நாள் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுமி கடந்த மூன்றாம் தேதி சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது சம்பவம் குறித்து உயிரிழந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து போக்சோ மற்றும் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கணவன் மத்தூரப்பாவை போலீசார் கைது செய்தனர். குழந்தை திருமணத்தில், குழந்தையை பெற்றெடுத்து விட்டு 15 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை திருமண தடை சட்டம் 2006-ன் படி 18 வயது பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்போர் மற்றும் உடன் இருப்போருக்கும் சிறை தண்டனை மற்றும் அபாரதம் விதிக்கப்படும். இந்த வழக்கில் சிறுமி கர்ப்பமாகி இருப்பதால், குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ், 3 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படலாம். குற்றத்தின் தீவிரம் கருதி மரண தண்டனை கூட வழங்கப்படலாம். மேலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை காவல்துறைக்கு தெரிவிக்க 1098 என்ற சைல்ட் ஹெல்ப்லைனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.